Tuesday, April 28, 2009

சிவராமின் நான்காவது ஆண்டு நினைவு அஞ்சலி




இதுவரை தீர்ப்பு வழங்கப்படாத சிவராம் கொலை வழக்குக்கு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மனங்களை விட்டு விலகி விடாத ஒருவரான தராக்கி என்ற சிவராமின் நினைவுகளை மட்டும் அனேகமானோர் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் கற்று உண்மைகள் பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமானது.

சிவராமின் நான்காவது நினைவு தினத்தில் அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் ஒரு சேரப் பதித்து வெளியிடுவதற்கான முயற்சியை யாராவது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

ஈழப்போராட்டத்தில் தனது வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வருடைய வாழ்க்கையின் பல ஞாபகங்கள் மறைந்தே போயின. இருப்பவற்றை மறைத்து விடாமல் வெளிப்படுத்தி வாருங்கள்.

பத்திரிகையாளர்கள் நல்ல பல புதிய விடயங்களைத் தொடருந்து கற்க வேண்டும் என்ற அவரின் ஆலோசனைக்கு அமைய சிந்தியுங்கள் செயற்படுங்கள் நோக்கங்களை நிறைவேற்றுங்கள். அது அவருடைய ஆத்மா சாந்தியடைய வழி செய்யும்.

Thursday, April 23, 2009

தமிழரை அடக்க தமது இறமையை அடகுவைக்கும் சிங்களத் தலைமைகள்

1977 பொதுத் தேர்தலில் தமிழீழத் தனியரசை நிறுவ மக்களிடம் ஆணை கேட்டுப் பெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி. 1979 இல் மாவட்ட சபைகள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அது சிறீலங்கா அரசுடன் ஆரம்பித்தது. இது தொடர்பான சட்ட விடயங்களை கலாநிதி நீலன் திருச்செல்வமும், தந்தை செல்வாவின் மருமகனான பேராசிரியர் ஜெரட்ணம் வில்சனும் கையாண்டனர்.

தமிழரை ஏமாற்ற ஸ்ரீ லங்கா அரசு பேச்சுவார்த்தைகளை மீண்டும் பயன்படுத்துகிறது. அவற்றை நீடிப்பதன் மூலம் தமிழ் இளைஞர்களை கொடூரமாக அடக்குவதற்கு வழிகோலுகிறது எனவும் கருதிய பேராசிரியர் வில்சன் தனிநாட்டுக்கான போராட்டத்தில் முழுமையாகக் குதிக்கும்படி கூட்டணியை வேண்டினர். (திரு. அமிர்தலிங்கமும் கலாநிதி நீலனும் அவருடைய அறிவுரையைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பது வேறு விடயம்).
இதுமட்டுமன்றி அவர் சில முக்கிய வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தமிழரின் நிலைமையை எடுத்துரைத்தார். இதன்போது கொழும்பிலுள்ள சீனத்தூதுவரை சந்தித்து தனித் தமிழ் ஈழம் உருவாக்கப்பட்டால் அதனை அவரது நாடு எங்கனம் நோக்கும் என பேராசிரியர் வில்சன் வினவினார்.

தமிழீழம் உருவானால் அது சோவியத் யூனியனின் செல்வாக்கிற்குட்படவே வாய்ப்பு உண்டு எனவும் அதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளுடனும், தனக்குச் சார்பான ஆபிரிக்க நாடுகளுடனும் தொடர்புகளைப் பேணுவது சீனாவிற்கு கடினமாகிவிடும் எனவும் சீனத் தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக பேராசிரிர் வில்சன் கூறுகிறார். இக்கூற்றின் தேந்திர (Strategic) ) பெறுமானங்களை பகுத்தறிய வேண்டிய தேவை அப்போது பேராசிரியர் வில்சனுக்கோ, அவர் சார்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கோ இருக்கவில்லை. ஆனால் இன்று எமது போராட்டமும் முழுக்க முழுக்க ஒரு சர்வதேச பரிமாணத்தினுள்ளேயே தனது எதிர்காலத்தை கணக்கெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தனது படைகளைக் கொண்டு புலிகளை அழித்து தமிழரைத் தனது சிங்கள பௌத்த மேலாண்மையாட்சியினுள் மீண்டும் அமுக்கி, சோரம் போக இம்மியளவும் தயங்காத, சூழலில் ஊறிப்போன மலையகத் தமிழ் அமைச்சர்கள் போன்ற தலைமைகளை எம்மிடையே உருவாக்கி எம்மை அடிமைப்படுத்தி ஆளலாம் என்ற நம்பிக்கையை ஸ்ரீ லங்கா அரசு கணிசமாக இன்று இழந்துவிட்டது.

இதேவேளை ஸ்ரீ லங்காவின் ஒற்றையாட்சி முறையை எந்த வøகயிலும் மாற்றிட முடியாது, கூடாது என்பதையும் சிங்கள மேலாண்மையாட்சியாளர் அறிவர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழரை கடந்த அரை நூற்றாண்டு செய்தது போல் ஒரேடியாகப் போய்க் காட்டிட முடியாதென்பதையும் அவர்கள் உணர்கின்றனர். இவையனைத்தையும் வகுத்துக் தொகுத்துப் பார்க்கையில் தமிழரைக் கையாள்வதற்கு வெளிநாடுகளின் உதவியை நாடிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வரலாற்று நோக்கில் பார்க்கையில் இதைச் செய்வதற்காக சிங்கள மேலாண்மையாளர் ஸ்ரீ லங்காவின் இறைமையை முற்றாக விட்டுக் கொடுப்பதற்குக் கூடத் தயங்கிட மாட்டார்கள் என்பது தெளிவாகப் புரியும்.

உலகின் வல்லரசுகளுக்கும், வல்லரசு நிலையை அடைய முனையும் நாடுகளுக்கும் இந்து மாகடல் எவ்வளவு முக்கியமானதென்பதும், அதனூடு செல்லும் பொருளாதார மற்றும் போரியல் முதன்மை வாய்ந்த கடற்பாதைகளின் சரி நடுவண் அமைந்துள்ள இலங்கை அவற்றின் தவிர்க்க முடியாத கணிப்புக்குரியதென்பதும் சிங்கள மேலாண்மையாளருக்கு நீண்டகாலமாகவே தெரியும். இøத அவர்கள் தேவை ஏற்படும் போதெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே வந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரம் பெரும் விடுதலைக் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்த தனது காலணிகளை தொடர்ந்து வைத்திருப்பது பொருளாதார வகையில் பயனற்றது என பிரித்தானிய ஏகாதிபத்தியம் உணரத் தொடங்கியிருந்த காலமது. அதேவேளை இக்காலனியாதிக்கத்துக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் தனது பொருளாதார மற்றும் போரியல் நலன்களை பாதிக்கக்கூடிய வகையில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதிலும் அது அக்கறையாயிருந்தது. அதாவது தனது பெரும்பாக நலன்களை தொடர்ந்து பேண உடன்படிக்கைய தலைமைகளிடம்தான் கைவிட வேண்டிய காலனி நாடுகளின் ஆட்சியை கொடுக்க அது எண்ணிற்று. இதன் காரணமாகவே இந்தியாவில் ஜெர்மனிக்குச் சார்பாகவும் சோவியத் யூனியனுக்குச் சார்பாகவும் செயற்படுகிறார்கள் எனக் கருதப்பட்ட தேசிய விடுதலைக் கோட்பாட்டாளர்களையும், கிளர்ச்சிக்காரர்களையும் ஓரங்கட்டுமுகமாக காந்தியையும் நேருவையும் முதன்மைப்படுத்தி அவர்களிடமே பிரித்தானிய ஆட்சியையும் கையளித்தது. (கமல்ஹாசனின் "ஹேராம்' படத்திலும், பிரித்தாளும் அரசியல் பற்றி நான் கடந்த ஆண்டு "நிகரி'யில் எழுதிய கட்டுரையிலும் இதுபற்றி சில மேலதிக தகவல்களைக் காண்க).

ஆசியாவில் பிரித்தானியாவின் கடல் மேலாதிக்கத்திற்கு அன்று இலங்கை அடித்தளமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவினூடாக ஜப்பான் தென்னாசியாவை நோக்கி மேற்கொண்ட பெரும் படையெடுப்பை எதிர்கொள்ளவென நிறுவப்பட்ட பிரித்தானிய அமெரிக்க கூட்டுக் கடற்படைத் தலைமையகம் திருமலையிலேயே அமைந்திருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். தென்கிழக்காசியாவின் வளங்கள், கடற்பிராந்தியங்கள் பாதைகள் என்பவற்றின் மீதும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகியவற்றின் மீதும் தனது பிடியை வைத்திருப்பதற்கு இலங்கையில் தனது படைத்தளங்களும் பெரும் எரிபொருட்களஞ்சியங்களும் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பதில் பிரித்தானியா கவனமாக இருந்தது. இதன் காரணமாக இலங்கையைத் தனது காலனியாதிக்கத் தலையினின்றும் விடுவிப்பதாயின் அதற்கு முழு இறைமையைக் கொடுப்பதில்லை என்பதிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உறுதியாயிருந்தது.

இதன் காரணமாக இலங்கைக்கு பகுதித் தன்னாட்சி வழங்கும் வகையில் செய்யப்படவிருந்த அரசியல் யாப்பு வரைபு முயற்சிகளுக்கு இன்றியமையாத அடித்தள நிபந்தனைகளாக பாதுகாப்பு வெளி அலுவல்கள் என்பவற்றை வரையறுத்து 1943ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் (Secretary of State) ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். 1943இரண்டாம் உலகப் போர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பிரித்தானிய அமெரிக்க ஆதிக்கத்தை முறியடித்து கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஜப்பானிய படைகள் தென்னாசியாவை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தன. எனவே இலங்கையில் தனது ஆதிக்கத்திற்குச் சவாலாக அமைந்திடக்கூடிய எவருடைய கையிலும் அரசியல் அதிகாரம் குறுங்காலத்திலோ நீண்டகாலத்திலோ போய்விடக் கூடாது என்பதில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது கவனமாக இருந்ததில் வியப்பில்லை.

இலங்கையில் பிரித்தானிய காலனியாதிக்கத்தை முற்றாக ஒழித்திட வேண்டும் என அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே குரலெழுப்பப்பட்டது. தென்னிலங்கையில் தீவிர இடதுசாரிகள் மாத்திரமே இக்கருத்தைக் கொண்டிருந்தனர். 1927 இலிருந்து குடாநாடெங்கும் கிளைவிட்டுப் பரவிய யாழப்பாண இளைஞர் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை இலங்கையிலிருந்து முற்றாக விரட்டியடித்து இலங்கையில் முழு இறைமையுள்ள தன்னாட்சி நிறுவப்பட வேண்டுமென தீவிரமாகச் செயலில் இறங்கிற்று. 1930 ஆம் ஆண்டு இலங்கையில் அன்று எவரும் செய்யப் பயந்து நடுங்கிய ஒரு செயலை அது செய்தது. அவ்வாண்டு ஜூன் மாதம் பிரித்தானிய மன்னரின் பிறந்த நாள். இலங்கையிலுள்ள குடி மக்கள் அனைவரும் அதைக் கொண்டாடி தமது அரச விசுவாசத்தை வெளிப்படுத்திடும் நாளாகும்.

அன்று யாழப்பாண இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பிரித்தானியக் கொடியைப் பொதுவிடத்தில் போட்டெரித்தனர். இதன் பின்னர் 1931 ஆம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸின் மாநாட்டில் இலங்கைக்கு முழுமையான தன்னாட்சி கிடைப்பதற்கு தம் உயிர்களைத் தியாகம் செய்தாயினும் நாட்டிலுள்ள அனைவரும் போராட வேண்டுமென அறை கூவல் விடுக்கப்பட்டது. அவ்வாண்டு பிரித்தானியர் அறிமுகப்படுத்திய டொனமூர் அரசியல் யாப்பு ஏகாதிபத்தியத்தின் பிடியை இலங்கையில் நீடிப்பதற்கான ஒரு சதியெனவும் அதனடிப்படையில் அமைக்கப்பட்ட அரசவையை (State council) அனைவரும் புறக்கணிக்க வேண்டுமெனவும் யாழ். இளைஞர் காங்கிரஸ் கூறியது. இதற்கென குடாநாட்டில் அது செய்த பெரும் பரப்புரை முயற்சி வெற்றி பெற்றது. பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு இலங்கையில் விடுக்கப்பட்ட பெரும் சவால் அம்முக்கியமான காலகட்டத்தில் இதுவேயாகும். தென்னிலங்கையில் இளைஞர் காங்கிரஸின் விடுதலை அறைகூவலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

இது இப்படியிருக்க பிரித்தானியாவின் நலன்களை நன்கு புரிந்து கொண்ட சிங்கள மேலான்மை நன்கு புரிந்து கொண்ட சிங்கள மேலாண்மையாளரின் தலைவர் டி.எஸ். சேனாநாயக்கா இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாயில் இங்கிலாந்து சென்றார். தன்னிடமும் தனது சிங்கள மேலாண்மைச் சகபாடிகளிடமும் இலங்கையின் ஆட்சி கையளிக்கப்படுமாயின்தான் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உடன்பட முடியுமெனவும் அதற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை சமாளித்து ஆட்சியைக் கொண்டு நடத்த முடியுமெனவும் உறுதியளித்தார். 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்களவரைத் தூண்டிவிட்ட ஒரு சிக்கலுக்குரிய பேர் வழியாக பல காலம் டி.எஸ். சேனநாயக்காவை கருதிவந்த பிரித்தானியா ஏகாதிபத்தியம் இப்போது அவரை அரவணைக்கலாயிற்று.

தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை மேலும் வெளிப்படுத்திடுவதற்காக 1943 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸினுள் இடதுசாரிகள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து டி.எஸ். சேனாநாயக்க அதிலிருந்து வெளியேறினார். இது அவர் மேற்கொண்ட நன்கு கணக்கிடப்பட்ட ஒரு செயலாகும். என சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் கே.எம்.டி. சில்வா கூறுகிறார். இலங்கையின் இடதுசாரிகளும் அந்நேரத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து முழுமையான தன்னாட்சி வேண்டும் எனக் கோரி வந்தனர். ஆனால், அவர்கள் யாழ். இளைஞர் காங்கிரஸ் போல் இதில் தீவிரமாக இருக்கவில்லை. சிங்கள இடதுசாரித் தலைவர்களான அறை கூவலைப் புறக்கணித்து அரசவைத்தேர்தலில் நின்றனர்.
இடதுசாரிகளின் எதிரியாக தன்னை இவ்வாறு காட்டிக் கொண்டதன் மூலமும் சிங்கள தேசத்தின் தந்தை தன்னை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தவிர்க்க முடியாத விசுவாசியாக உருவாக்கிக் கொண்டார்.

பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது தொடர்பாக டி.எஸ்.சேனாநாயக்கவும் அவரது நண்பர்களும் இங்கிலாந்து சென்று அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரித்தானியாவின் ஆசிய மேலாதிக்கத்தை பேணுவதற்கு வேண்டிய தளங்களையும் துறைமுகங்களையும் அத்துடன் இலங்கையினுடைய வெளிநாட்டு அலுவல்களையும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தானும் தன்னைச் சார்ந்த சிங்கள மேலாண்மை தலைவர்களும் தயாராயிருப்பதாக இங்கிலாந்தின் ஏகாதிபத்திய உயர் அதிகாரிகளை நம்பவைத்தார்.

இந்த அடிப்படையிலேயே இலங்கைக்கு தன்னாட்சி வழங்கப்பட்டபோது பிரித்தானியாவுடன் மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தன்னுடைய தேவைக்கு ஏற்ற படைகளையும் போர்தளபாடங்களையும் இலங்கையில் பிரித்தானியா வைத்திருக்கலாம் எனவும் அதற்கு உகந்த வகையில் இந்நாட்டின் கடல் மற்றும் வான் படைதளங்களையும் தொலைத் தொடர்பு வசதிகளையும் பயன்படுத்தலாம் எனவும் இவ்வொப்பந்தத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி திருகோணமலை பிரித்தானிய கடற்படை தேவைகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் பிரித்தானிய வான் படையின் பாவனைக்கும் விடப்பட்டது.

இலங்கையின் இறைமையை பிரித்தானியாவுக்கு இங்ஙனம் தாரை வார்த்ததற்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு டி.எஸ். சேனõநாயக்க அவர்களும் அவருடைய சகபாடிகளும் பின்வருமாறு விளக்கமளித்தனர். இலங்கை ஒரு சிறிய நாடு, அதன் மத இந்திய மற்றும் சோவியத் யூனியன் படையெடுத்திடக்கூடிய வாய்ப்பு உண்டு. அதை தடுக்க பிரித்தானியா வுடன் மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தம் கட்டாயமாக தேவை என அவர்கள் சாட்டுகின்றனர்.

மேற்படி ஒப்பந்தம் இலங்கையினுடைய இறைமையை இல்லாமல் செய்கிறது என்ற காரணத்தைக் காட்டி சோவியத் யூனியன் 1955 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கிடைப்பதை தடை செய்து வந்தது. 1956 இல் ஆட்சிக்கு வந்த திரு. பண்டாரநாயக்க அவர்கள் தன்னுடைய ஏகாதிபத்திய எதிர்பார்ப்புக்கு கோட்பாட்டை நிலை நாட்டு முகமாக இவ்வொப்பந்தம் செல்லுபடியாகாது என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இக்காலகட்டத்தில் பிரித்தானியாவின் கையில் இருந்து சுயஸ்கால்வாய் பறிபோயிருந்தது. இதன் காரணமாக பிரித்தானியாவில் இருந்து மத்திய தரைகடல், செங்கடல், அரபிக் கடல் என்பவற்றின் ஊடாக செல்கின்ற கடற்படை பாதை மீதான பிரித்தானியாவின் பிடி அற்றுப்போனது. இதனால் அந்நாடு இலங்கையில் தளங்களையும் படைகளையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லாது போயிற்று. எனவே பண்டாரநாயக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை உதாசீனம் செய்ததை பிரித்தானியா பெரிதுபடுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனினும் 1983 ஆம் ஆண்டிலே தமிழர்களுடைய போராட்டம் முனைப்பு பெறும் என்ற நிலையிலும் இதையொட்டி இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்ற அச்சத்தில்அன்றைய ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் பிரித்தானியாவினுடனான மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் பிரித்தானியா அவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு போர் உதவி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இவ்வளவு வரலாறும் ஏன் தேவையென்ற கட்டத்தில் நீங்கள் வினவலாம்.
ஒன்று பிரித்தானிய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடித்தளமான விடயங்களை இதுவரை இங்கு போட்டு வரும் பிராந்திய மற்றும் வல்லரசுத் தலையீடுகளுக்கு காரணமாகவுள்ளது என்பது.

இரண்டு மேற்படி விடயங்களே சோழர் கடல் கடந்த படையெடுப்புகளுக்கும் அவர்கள் இலங்கை தீவின் மீதும் கொண்டிருந்த மேலாதிக்கத்திற்கும் சீனா அன்றும் இன்றும் இந்நாட்டின் கீழ் கொண்டிருக்கும் அக்கறைக்கும் தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் ஜப்பானும் இங்கு காட்டும் கரிசøனக்கும் அடிப்படை என்பது.

மூன்றாவதும், முக்கியமானதுமாக நாம் இவற்றில் கவனிக்க வேண்டியது எமது விட்டுக்கொடுக்கப்படாத இறைமையாகும். இலங்கையில் அவ் உருவாக்கம் நடைபெற்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் (1947, 1972, 1978) நாம் எமது இறைமையை விட்டுக் கொடுக்கவில்லை. இதனுடைய அர்த்தம் என்னவெனில் சிங்கள தேசம் தமது இறைமையை விட்டுக்கொடுத்து செய்துக்கொண்ட செய்ய முனைகின்ற எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கும் நாம் கட்டுப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதாகும். இதன் காரணமாகவே எமது இறைமையை பேணும் உறுதியை குழைப்பதை பல புல்லுருவிகளும் கயவர்களும் எம்மிடையே ஏவப்படுகின்றார்கள். இவர்களை நாம் இனங்கண்டு எமது இறைமையை இம்மியளவும் விட்டுக் கொடாதர்வர்களாக தன்மானத்துடன் வாழ வேண்டும். (சீனத் தூதுவர் பேராசிரியர் வில்சனிடம் தமிழீழம் பற்றிக் கூறிய கருத்தின் விரிவையும் அதன் இன்றைய பரிமாணங்களையும் அடுத்த கிழமை பார்ப்போம்).

29.06.2003 டி. சிவராம்

Wednesday, April 22, 2009

சர்வதேச காப்பு வலை ஒரு போரியல் வலை

புலிகள் டோக்கியோ மாநாட்டிற்குப் போயிருந்தால் அது தமிழரின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு சிறீலங்கா அரசு நல்லதோர் தீர்வைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறது என்ற பொய்மையைமேலும் வலுவாகப் பரப்புவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது சகபாடிகளுக்கும் நல்லதோர் வாய்ப்பாக அமைந்திருக்கும். எந்தவொரு தீர்வையும் தந்திட சிறி லங்கா அரசு தயாரில்லை. மாறாக பலஸ்தீன மக்களை ஒரு சர்வதேச கெடுபிடிக்குள் மாட்டி வைப்பதற்கும் அதன்மூலம் அந்த மக்களின் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கு நோர்வேயின் உதவியோடு நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களை எவ்வாறு இஸ்ரேல் பயன்படுத்தியதோ அதே பாணியில் ரணில் விக்கிரமசிங்க தனது அரசு வேலை பார்க்கிறது என்ற உண்மை அம்பலமாவதற்கு மேலும் பல மாதங்களாகியிருக்கும்.

புலிகள் ஜப்பான் போகாததால் அவர்களை மீண்டும் வழிக்கு கொண்டு வந்திடவே முன்னர் சொல்லப்பட்டதை விட கூடுதல் நிதி வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டது என்பதையும் புஷ் நிர்வாகத்தின் நோக்கம் அரசியல் மற்றும் நிதி வழிப்பட்ட அழுத்தங்களின் ஊடாக வன்முறையை புலிகள் அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வருவதேயாகும் என அமெரிக்க துணை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆர்மிரேஜ் TBS-TV தொலைக்காட்சிக்கு கூறியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மேற்படி நிதி வழிபட்ட அழுத்தம் என அர்மிரேஜ் குறிப்பிடுவது உண்மையில் நமது நியாயமான உரிமைகளை விட்டுக் கொடுத்து சிறிலங்காவின் சிங்கள மேலாண்மை அரசியல் யாப்பிற்குள் முடங்கிப் போவதற்கான கையூட்டே (இலஞ்சம்) ஆகும். நோர்வேயின் உதவியோடு இப்படித்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் அரபாத்தை மடக்கின. (அதன் கொடூரமான விளைவுகள் என்ன என்பதை நீங்கள் நாளாந்தம் செய்தியேடுகளில் காண்கிறீர்கள்) புலிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பேச்சு வார்த்தைக்குத் திரும்பாவிட்டால் ஜப்பானில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 80 விழுக்காட்டிற்கு மேல் சிறிலங்காவிற்கு வந்து சேராது என்பதையும் இதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது சர்வதேச காப்பு வலையை மேலும் தமிழரின் குரல் வளையைச் சுற்றி இறுக்க முடியாது போகும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக கவிழும் நிலையிலிருந்த சிறிலங்கா அரசை நிமிர வைக்க புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பே உதவியது எனவும் பேச்சுவார்த்தைக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்கும் வகையில் புலிகள் உள்ளக சுய நிர்ணய உரிமையையும் ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் சமஷ்டியாட்சி முறையையும் ஏற்றுக் கொண்டனர் எனவும் ஆனால் பிரதமர் ரணில் இதற்கு கைமாறாக சரியான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதை விடுத்து சர்வதேச வலையொன்றை விரிப்பதிலேயே கவனமாக இருக்கிறார். இது அமைதிக்கு நல்லதல்ல என அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் சிங்கள தேசத்தின் நன்கறியப்பட்ட கருத்தாளர்களில் ஒருவருமான பேராசிரியர் ஜயதேவ உயங்கொட அண்மையில் எழுதியிருந்தார்.

உண்மை இப்படியாக இருக்க சில புலித்தலைவர்கள் ஏன் பிரதமர் ரணில் நல்லவர், நம்பிக்கையானவர் எனக் கூறத் தலைப்பட்டனர் எனவும் அவர் ஒரு நியாயமான கேள்வியையும் எழுப்புகிறார். இந்நிலையில் நமது நியாயமான அரசியல் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சிதையடையாமல் பார்த்துக் கொள்வதற்கு போரால் அழிந்து கிடக்கும் நமது தாயகத்தை மீளக் குடியெழுப்புவதற்கும் இப்பேச்சு வார்த்தைகளின் சில அடிப்படைகள் திட்டவட்டமாக மறுசீரமைக்கப்பட வேண்டும். அத்துடன் எந்த நோர்வேயூடாக பிரதமர் ரணிலும், மிலிந்த மொறகொடவும் அமெரிக்காவும் எமது நியாயமான அரசியல் பொருளாதார எதிர்பார்ப்புக்களை முடக்கிப் போடுவதற்கான வலையை எம்மைச்சுற்றி இறுக்கி வருகிறார்களோ அதே நோர்வேயிடம் தனது இடையீட்டுப் பணியை இனியும் தொடர்வதாயின் அது மேற்படி வலைச்சுற்றலை செய்வதற்கான மறைமுகத் தரகர் வேலையை முற்றாக கைவிடும் படி வலியுறுத்தப்பட வேண்டும். இனி சிறிலங்கா பிரதமர் ரணில் விரித்துள்ள சர்வதேச காப்பு வலை என்பது என்ன என்பதையும்அது ஏன் அவருக்கு இன்றியமையாத படி தேவைப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

தத்தமது நலன்களை இலங்கையில் வளர்த்தெடுப்பதற்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இங்கு போர் தற்காலிகமாக வேணும் ஓய வேண்டும் என்ற தேவை கடந்த பல ஆண்டுகளாக மிக வெளிப்படையாக இருந்து வருகிறது.

அமெரிக்காவிற்கு இங்கு தளம் அமைப்பதற்கு வாய்ப்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதும் இந்தியாவிற்கு தனது மூலதனப்பரம்பலை விரிவாக்குவதோடு இலங்கையை தன் நலனுக்குக் குந்தமாக வேறு நாடுகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஜப்பானுக்குத் தன் மூலதனத்தினதும் பிராந்திய அரசியல் செல்வாக்கினதும் ஒரு முக்கிய தளமாக இலங்கையை மாற்றிட வேண்டும் என்பதும் குறிக்கோளாக உள்ளன என்பதை பல ஆண்டுகளாக ஐக்கிய தேசிய கட்சி சரியாகவே புரிந்து வைத்திருந்தது.

அத்தோடு இந்நாடுகள் தத்தமது குறிக்கோள்களை அடைந்திடவும் அவற்றின் நன்மைகளை நீண்ட காலத்தில் வலுப்படுத்திடவும் புலிகள் போரில் ஈடுபடாதவாறு அமைதிப் பேச்சு வட்டத்தினுள் கட்டுண்டு கிடந்திட வேண்டும் என்பதையும் ஐ.தே.க தலைவர் ரணில் உணர்ந்திருந்தார். எனவே புலிகளோடு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த கையோடு மேற்படி நாடுகள் இங்கு பெரிய அளவில் தமது மூலதனங்களை கொண்டுவருவதற்கான வேலைகளில் அவர் ஈடுபடலாயினார்.

அவருடைய செயலின் பின்னனியில் இருந்த தர்க்கம் மிக இலகுவானது. அதாவது உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் பொருளாதார மற்றும் கேந்திர நலன்கள் எந்தளவிற்கு பரவி வேரூன்றுகின்றனவோ அந்தளவிற்கு அந்த நாடுகள் புலிகள் மீண்டும் போருக்குப் போகாமல் பார்த்துக் கொள்ளும் என்பதே அது. இதனாலேயே அவர் ஒருபக்கம் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் இங்கு விரைந்து காலூன்றிவிடுவதற்கான அவசரப் பேச்சுவார்த்தைகளையும் மறுபுறம் அமெரிக்க அரசுடன் ACSA ஒப்பந்தம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பவற்றை செய்து கொள்வதற்கு அமைச்சர் மிலிந்த மொறகொடவை துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்.

சிறிலங்கா அரசியல் தமிழருக்கு எந்த வகையான தீர்வையும் வழங்கிட முடியாது. தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலை கூட்டணி வரதராஜப் பெருமானின் ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி என்பவற்றின் வரிசையில் புலிகளையும் தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தனைப் போல் சிறிலங்கா அரசு ஏமாற்றுகிறது என்ற உண்மை மிக உறுதியாக வெளிப்படும் காலத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கேந்திர மற்றும் பொருளாதார முதலீடுகள் கணிசமாகப் பெருகிவிடும் என்பது ஐக்கிய தேசிய கட்சித் தலைமையின் கணிப்பு. அதாவது எந்தத்தீர்வும் கிடைக்காத நிலையில் புலிகள் மீண்டும் போருக்குப் போக முற்பட்டால் அதன் விளைவு தமது முதலீடுகள் மீது பொறுக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உந்துதலில் மேற்படி நாடுகள் அவர்களை எவ்வழிப்பட்டும் தடுத்திடும் என்பது திட்டம். இதனையே சர்வதேச காப்பு வலை (International Safty Net) என பெருமிதத்துடன் கடந்த ஆண்டு புலிகளுடன் கவனமாகஅலுவல் பார்க்க வேண்டும் என அவரை எச்சரித்த பலரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார்.

மேலைத்தேய போரியியலாளர் கூறும் கட்டுக்குள் பேணும் தந்திரோபாயம் (Containment Strategy)என்பதன் ஒரு வடிவமே பிரதமர் ரணிலின் சர்வதேச காப்பு வலைத் திட்டமாகும். சிறிலங்கா படைத்துறையின் தீச்சுவாலை நடவடிக்கையை புலிகள் முறியடித்தகையோடு சிறிலங்கா அரசினதும் அதன் அமெரிக்க பிரித்தானிய படைத்துறை மதியுரைஞர்களதும் போரியற் கோட்பாட்டுக் களஞ்சியத்துள் எஞ்சியிருந்தது. இந்தக் கட்டுக்குள் வைத்திருக்கும் திட்டமே. தீச்சுவாலை நடவடிக்கையை முறியடித்த பின்னர் புலிகள் திருமலை மீது குறிவைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்ற அச்சம் அமெரிக்க படைத்துறையினருக்கு உண்டாகலாயிற்று. மட்டக்களப்பில் தளபதி கருணாவின் கீழ் கணிசமான படைகள் ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகின்றன என்ற தகவலும் திருமலைத் துறைமுகம் அமைந்துள்ள கொட்டியாரக்குடõவின் தென் பகுதியான மூதூர் கிழக்குப்பிராந்தியத்தில் தளபதி பதுமனின் படைகளும் போருக்குத் திரள்கின்றன. என்ற செய்தியும் மேற்படி அச்சத்தை தோற்றுவித்தன.

தளபதி கருணாவின் படைகள் மட்டக்களப்பின் வடக்குப்பகுதியில் தயாராகிக் கொண்டிருந்ததால் அவை அநேகமாக மூதூரை நோக்கி முன்னேறி தளபதி பதுமனின் படைகளுடன் இணைப்பேற்படுத்திக் கொண்டு (Link up) திருமலையின் சுற்றுப்புறத்தையும் அதை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பாதைகளையும் கைப்பற்ற முனையலாம் எனவும் இதே வேளை வவுனியாவை அச்சுறுத்தும் வகையில் புலிகள் ஒரு படையெடுப்பை தொடங்கினால் சிறி லங்கா அரசால் அதன் கிழக்குத் துறைமுகத்தை பாதுகாக்க முடியாது போய் விடும் என 2001 இன் நடுப்பகுதியில் அமெரிக்க படைத்துறை மதிப்பீடு செய்தது. இது நடைபெற்றால் சிறிலங்கவின் கடற்படை மற்றும் வான் படைத் தளங்களை கையகப்படுத்தும் தனது ACSA ஒப்பந்தம் அர்த்தமற்றதாகிவிடும் எனவும் அது கவலை கொள்ளலாயிற்று. இந்த விடயம் சந்திரிக்கா அரசின் இந்தியச் சார்பாளர்சிலரால் டெல்லியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. திருமலையிலுள்ள எமது நலன்களில் கைவைக்காத வரை புலிகள் அங்கு என்ன படையெடுத்தாலும் எமக்கு அக்கறை இல்லை என்று மட்டும் அப்போது இந்திய வெளியுறவு அலுவலர் ஒருவர்தெரிவித்தார்.

(இது என்ன நோக்கில் கூறப்பட்டது என அப்போது தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை) இந்த வகையில் புலிகளுக்கு கிடைத்திடக் கூடிய ஒவ்வொரு வெற்றியும்சிறி லங்காவின் இறைமையைக் குறைக்கும் எனவும் இதன் காரணமாக அதனுடன் கைச்சாத்திடக்கூடிய ACSA மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பவை வலுவற்றதாகி விடும். எனவும் அமெரிக்கா கரிசணை கொள்ளலாயிற்று. இந்த நிலையில் புலிகளுக்கு சாதகமாக இலங்கைத்தீவில் போர்ச்சமநிலை விரைவாக மாறிச்செல்வதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு இருந்த ஒரே வழி மேற்படி கட்டுக்குள் முடக்கி வைத்திருக்கும் தந்திரோபாயமே.

இப்போரியற் கோட்பாட்டின் முதலாவதும் முக்கியமானதுமான அடித்தளம் அமைதிப் பேச்சுக்களேயாகும். அதாவது அமைதியை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை என்பது வேறு போரிடல் திட்டமிடலின் ஒரு வெளிப்பாடாக நடைமுறைப்படுத்தப்படும் பேச்சு வார்த்தை என்பது வேறு. எனவே 2001 இன் நடுப்பகுதியில் காணப்பட்ட போர்ச் சமநிலையைக் கருத்திற் கொண்டு அப்போது சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா என்பனவற்றின் பின்னனியோடு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் போரியற் தந்திரோபாயத்தின் வெளிப்பாடாகவே அன்றி வேறு வகையில் அமைந்திட முடியாது என நான் எழுதியிருந்தேன்.

ஏனெனில் இந்தக்காலத்தில் அமெரிக்க சார்பு கொலம்பிய அரசுக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தையும் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீன மக்களின் போராட்டத்தையும் கட்டுக்குள் போட எடுக்கப்பட்ட முயற்சிகளின் அதே சாயல்கள் இங்கும் தென் படத் தொடங்கியிருந்தன. 1997 இல் கொலம்பிய படைகளை முறியடித்து அந்நாட்டின் அரசைக்கவிழ்க்கக்கூடிய நிலையில் அங்குள்ள பார்க் (FARC) இயக்கம் பெரு வளர்ச்சியடைந்துள்ளது எனவும் இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அமெரிக்காவின் பின் புலத்தில் பேராபத்துத் தோன்றி விடும் எனவும் அமெரிக்கப் படைத்துறை கூறியது.

எனினும் கொலம்பியாவின் உள்நாட்டுப்போரில் சிக்கிடவும் அமெரிக்கா தயாராக இருக்கவில்லை. ஆகவே கொலம்பிய அரசின் மீது கடும் அழுத்தத்தைக் கொடுத்து தாமதமின்றி போராளிகளுடன் அமைதிப் பேச்சு வார்த்தைகளை உடன் தொடங்குமாறு வற்புறுத்திற்று. அமைதிப் பேச்சுக்களும் பல திரைமரைவு வேலைகளின் பின்னர் 2000 ஆம் ஆண்டளவில் ஆரம்பமாயின. ஆரம்பத்தில் அனைத்தும் மிக சுமுகமாகவே இருந்தன. போராளிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கொலம்பியாவின் 40 விழுக்காடு நிலப்பரப்பு அவர்களின் கட்டுப்பாட்டினுள் இருக்கலாம் என உடன் பாடு காணப்பட்டது.

ஆனால் காலப்போக்கில் கொலம்பிய அரச அமைப்பின் உயர்வர்க்க மேலாதிக்க அம்சங்களை மாற்றுவதில் இழுபறிகள் தோன்றலாயின. ஆனால் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலப்பகுதியில் கொலம்பியாவின் படைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா கோடிக்கணக்கான டொலர்களை அங்கு கொட்டியது. சண்டைகள் இல்லாதிருந்தால் கொலம்பியப்படைகளை பயிற்றுவிப்பதும் புலனாய்வுவேலைகளை விரிவாக்குவதற்கும் அமைதிப் பேச்சுக்கள் அமெரிக்காவிற்கு ஒரு பெரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தன. அத்துடன் கொலம்பிய அரசியலில் முழுமையாகத் தனது சொற்படி நடத்தக்கூடிய வலது சாரி கடும்போக்காளரான அவ்வாரே உரிபே என்பவரை அமெரிக்கா வலுப்படுத்தி கடந்த ஆண்டு அந்நாட்டு ஜனாதிபதியாக்கிற்று. அமைதிப் பேச்சுக்கள் அமெரிக்காவின் தேவைகளுக்கேற்ப கொலம்பிய அரசால் நகர்த்தப்படுவதை காலம் பிந்தி உணர்ந்துகொண்ட பார்க் இயக்கம் தன்னை நிலைப்படுத்திட முயற்சி எடுக்க முன்னர் அந்நாட்டுப் படைகள் நடவடிக்கைகளில் இறங்கின.

பார்க் இயக்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நிலப்பரப்பின் பெரும் பகுதியும் அதன் தலை நகரமும் கொலம்பியப் படைகளிடம் கையகப்பட்டன. ஆயுதங்களை கீழே போடும் வரை இனி பார்க் மற்றும் ஏனைய போராளி இயக்கங்களுடன் பேச்சுக்கே இடமில்லை என உரிபே அறிவித்து விட்டார். இவ்வாறாகக் கொலம்பிய அரசு பார்க் அமைப்புடனான அமைதிப் பேச்சுக்களை தனது பெரும்பாக போராட்டத்தின் ஒரு இன்றியமையாத அங்கமாகவே அமெரிக்காவின் உதவியோடு வடிவமைத்து செயற்படுத்தியது. கொலம்பியாவின் அரசமைப்பை இடது சாரிப் போராளிகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அந்நாட்டின் வறிய மக்களுக்கு சார்பாக மாற்றியதால் அது தனது மூலதன இராணுவ நலன்களையே முதன்மையாகப் பாதிக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.

தமது இருப்பிற்கு அமெரிக்காவை நம்பியிருந்த கொலம்பிய ஆளும் வர்க்கங்களும் அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதில்லை என இரகசிய உறுதிப்பாட்டுடனே போராளிகளுடன் அமைதிப்பேச்சுக்களில் இறங்கினர். எனவே அந்தப் பேச்சுக்களில் கொலம்பிய அரசிற்கு ஒரேயொரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. அதாவது தனக்குச் சாதகமான முறையில் பார்க் இயக்கத்தை கட்டுக்குள் முடக்கி நீண்டகாலம் வைத்திருப்பதே அது. இது இப்படியிருக்க 2001 ஜூலை மாதம் அமெரிக்க தலைநகரிலுள்ள சர்வதேச மற்றும்கேந்திர ஆய்வுகளுக்கான மையத்தில் கொலம்பிய இலங்கை போர் நிலைவரங்களை ஒப்பிட்டு இலங்கையில் அரசியல் யாப்பை மாற்றிட எந்தவழியுமின்மையால் அங்கு அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெறும் பட்சத்தில் அதை புலிகளை மடக்கிப் போடும் ஒரு பெரும்பாக போர்த்திட்டத்தின் வெளிப்பாடாகவே ஸ்ரீலங்கா அரசு கையாள முனைவது தவிர்க்க முடியாதது என ஆற்றிய உரையைச் செவிமடுத்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அமெரிக்க கூட்டுப்படைத்தலைமையகம் வெளியுறவுத்திணைக்களம் போன்றவற்றின் அதிகாரிகள் கேட்ட கேள்விகளும் தெரிவித்த கருத்துகளும் எனது மேற்படி ஒப்பீடும் எடுகோளும் சரியாகவே இருக்கலாம் என்பதைக் கோடிட்டுக்காட்டின.

கொலம்பியாவைப்போல் இங்கும் அரசியல் யாப்பை மாற்றிடும் எண்ணம் அரசுக்கு இல்லை. இங்கும் வருங்காலங்களில் தனது ஒப்பந்தங்களை நிலைப்படுத்திட ஸ்ரீ லங்காவின் ஒற்றையாட்சியே அமெரிக்காவுக்கு சாதகமாக உள்ளது. சமஷ்டி ஆட்சி ஏற்பட்டு வடக்குக் கிழக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் தனக்குச்சாதகமற்ற ஒரு ஆட்சி அமைந்தால் அது தனது ஒப்பந்த நலன்களை பாதிக்கும் என்பது அமெரிக்காவின் கருத்து. இதனாலேயே பிரித்தானியா நோர்வே என்பவற்றின் செல்வாக்குகளைப் பயன்படுத்தி புலிகளை உள்ளக சுய நிர்ணய உரிமை, மரபுவழி வதிவிடங்கள் என ஒற்றையாட்சியை நோக்கி ஆரம்பகட்டத்திலேயே இறங்கி வர வைத்தது. இது இந்தியாவிற்கும் சாதகமாயிற்று.

இவையனைத்தையும் கருத்திற் கொண்டே பேச்சுவார்த்தையை ஒரு பெரும்பாகப் போரியல் பொறியாக அமெரிக்கா ஆரம்பத்திலிருந்து கருதி வருகிறது என நாம் ஆணித்தரமாக கருத வேண்டியுள்ளது. இதை நன்றாகப் புரிந்து கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சர்வதேச காப்பு வலையை பேச்சுக்கள் ஆரம்பமான காலத்திலிருந்து அமெரிக்கா இந்தியா ஆகியவற்றின் உதவியுடன் விரித்து வருகிறõர்.
ஆனால் இதைச் செய்வதற்கான கால அட்டவணைத்திட்டத்தை டோக்கியோ போகாததன் மூலமாக புலிகள் குழப்பி விட்டார்கள். அமெரிக்க இந்திய மற்றும் ஜப்பானிய நலன்கள் இங்கு சரியாக வேரூன்ற இன்னும் காலம் தேவை.

அதுவரை இந்நாடுகள் எதுவுமே பிரதமர் ரணிலுக்கு சார்பாக புலிகளை மடக்கக்கூடிய நேரடி அழுத்தங்களை செலுத்திட முடியாது.
1983 இலிருந்து 87 வரை நடக்கின்ற உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்காததால் இந்தியாவின் கால அட்டவணை திட்டப்படியெல்லாம் ஆடி கடைசியாக பெருசிக்கலில் மாட்டினோம். இனியும் அப்பிழையை நாம் விடமுடியாது, கூடாது.
இதை நாம் செய்வதற்கு முதற்படி தமிழ் மக்கள் மீண்டும் ஒரு சரியான உறுதியான அரசியல் அடித்தளத்தில் காலூன்றி நிற்பதேயாகும் எனவேதான் மீண்டும் கூறுகிறேன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேடுங்கள் படியுங்கள்.

15.06.2003 டி.சிவராம்

Tuesday, April 21, 2009

தமிழர் தம் இறைமையை விட்டுக் கொடுக்க இயலாது

போரால் பறிக்க முடியாமல் போன நாகலாந்தின் இறைமையை இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் மடக்கிப் போட முனைந்து வருகிறது இந்திய அரசு. அதாவது தமிழ் மக்கள் தமது இறைமையை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசுருவாக்கத்தில் இம்மியளவும் விட்டுக் கொடுக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக இயங்குவதாயின் விதிகள் அல்லது சட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்கள் அவற்றின் அடிப்படையில் அமைந்த நீதி பரிபாலனம், அம்மக்கள் கூட்டம் உருவாக்கும் செல்வத்தில் ஒரு பகுதியை (உபரி) சேகரித்து சமூகத் தேவைக்கு பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், அம்மக்கள் கூட்டத்தின் உள்ளும் புறமும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஒழுங்குகளை ஏற்படுத்தல், மேற்கூறியவற்றை செய்வதற்குரியவர்களை தெரிவு செய்தல் என்பன அவசியமாகும்.

ஒரு புவியியல் பரப்பினுள் மேற்படி கூறப்பட்ட அனைத்தும் செய்யப்பட்டபொழுது அரசுகள் உருவாகின. இந்த வகையில் உலகின் மிகப் பழைய சமூக நிறுவனம் அரசே ஆகும். சமூக, அரச உருவாக்கத்திற்கான மேற்படி செயல்களை ஆற்றும் தகைமையையே நாம் இறைமை (Sovereignty) என்கிறோம். மன்னர் ஆட்சிக் காலத்தில் மேற்படி செயல்கள் அனைத்தையும் செய்யும் தகைமை, உரிமை அரசனுக்கு மட்டுமே இருப்பதாக கொள்ளப்பட்டது. பல பழைய சமூகங்களில் இவ்விறைமை மன்னனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டதாகவும் சில மக்கட் குழுமங்களில் இது மக்களாக உடன்பட்டு அரசனுக்கு வழங்கியதாகவும் பலவாறாக கருதப்பட்டது. முடியாட்சிகள் மக்களாட்சிகளாக மாறியபோது மேற்படி இறைமை ஒரு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதாயிற்று. ஒரு மக்கட் கூட்டம்தான் ஒரு சமூகமாக இயங்குவதற்கு என மேற்படி விடயங்களை செய்கையில் அது தன் இறைமையை செயற்படுத்துகின்றது எனக் கொள்ளப்படும்.

இவ்வாறு ஒரு சமூகம் தனது இறைமையை தன் சொந்த விருப்பின்படி பிரயோகிப்பதே அதன் சுய நிர்ணய உரிமை எனப்படுகிறது. ஒரு சமூகம் தான் சுமூகமாக இயங்குவதற்கும் தனது நலன்களை பேணி பாதுகாத்து நிலை நிறுத்துவதற்கும் ஏற்றவகையில் அது தனது இறைமையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது விரிவாக வரையறுக்கும் ஆவணமே ஒரு அரசின் அரசியல் யாப்பாகும்.

இந்த வகையில் ஒரு மக்கட் குழுமம் தன் இறைமையை செயல்படுத்தி ஒரு அரசியல் யாப்பை அதாவது ஒரு அரசை ஏற்படுத்தலாம் அல்லது தனது சொந்த விருப்பின்பேரில் இன்னொரு சமூகத்துடன் இணைந்து அதைச் செய்யலாம் அல்லது இன்னொரு மக்கட் குழுமம் உருவாக்கும் அரசியல் யாப்பு, அரசு தனது உகந்ததெனக் காணுகையில் தனது இறைமையை அந்த உருவாக்கத்திற்கு தன் நலன்களை பேணிடக்கூடிய நிபந்தனைகளோடு ஒப்புக்கொடுக்கலாம்.

வரலாற்றை பொறுத்தவரையில் தம்மைத் தனித்துவமான சமூகங்களாக கருதிய எல்லா மக்கட் குழுமங்களுக்கும் தமது இறைமையை தங்கு தடையின்றி செயல்படுத்திட முடிந்ததில்லை. வன்முறை மற்றும் அரசியல் வழிப்பட்ட மேலாதிக்க முறைகள் மூலம் அவை தமது இறைமையை முழுமையாக செயற்படுத்த முடியாதபடிக்கு தடைகள் போடப்பட்டன. தன்னுடைய இறைமையை முழுமையாக செயல்படுத்தி அரசுருவாக்கத்தில் ஈடுபடும் ஒரு சமூகம் தனது அதிகாரத்தினுள் இன்னொரு சமூகத்தினை அதன் இறைமை ஒப்புதல் இன்றி வைத்திருப்பதையே நாம் காலணியாதிக்கம் என்கிறோம்.

ஒரு சமூகம் தனது ஆதிக்க எல்லைக்குள் வாழும் வேறு எந்த மக்கட் குழுமமும் தனது இறைமையை முழுமையாக செயல்படுத்த முடியாதபடி ஒரு அரசை உருவாக்கும்போது அது ஒற்றையாட்சி எனப்படுகிறது. இந்த வகையில் தன்னகத்தே இறைமையுள்ள வேறு சமூகங்களை உள்ளடக்கிய ஒற்றையாட்சிக்கும் காலனியாதிக்கத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. வரலாற்றில் இவ்வாறான சூழலில் அகப்பட்டுக் கொள்ளும் சமூகங்கள் ஒன்று, தமது இறைமையை எந்த அடக்குமுறைகளின் கீழும் விட்டுக் கொடுக்காது போராடுகின்றன. இரண்டு பகுதியாகவோ, முழுமையாகவோ தமது இறைமையை விட்டுக்கொடுத்து அதன் காரணமாக இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றன. மூன்று, தமது இறைமை முற்றாக பறிக்கப்பட்ட நிலையில் ஆதிக்க சமூகங்களினுள் கரைந்து போயின.

முதலாவது வகையில் நாம் இந்தியõவின் வட கிழக்கில் உள்ள நாகா இன மக்களையும் இந்தோனேஷியாவின் ஆச்சே மக்களையும் இலங்கைத் தமிழரையும் குறிப்பிடலாம். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நாகலாந்து ஒரு தனியரசாக இருந்து வந்தது. அதை நீண்டகால போருக்கு பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கைப்பற்றி தனது இந்திய காலனி அரசின் ஒரு அங்கமாக இணைந்தது.

1947இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாகா இன தலைவர்கள் காந்தியை சந்தித்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பறித்தெடுக்கப்பட்ட தமது மக்களின் இறைமையை மீள்நிலைநாட்டிடும் வகையில் தாம் மீண்டும் ஒரு சுதந்திர நாடாக செயல்படப் போவதாகக் கூறினார்கள்.
அவர்களை அப்படி செய்ய வேண்டாமெனவும் நாகலாந்து தற்காலிகமாக இந்தியாவுடன் பத்து வருடங்கள் இணைந்திருந்த பின் பிரிந்து போகலாம் எனவும் காந்தி விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பத்து வருடங்களின் பின்னர் காந்தியோடு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நாகலாந்து தனது சுதந்திரத்தை இறைமையை நிலைநாட்ட முற்பட்டபோது இந்திய படைகள் அங்கு அனுப்பப்பட்டன. பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. எனினும் நாகா மக்கள் 50 வருடங்களிற்கு மேலாக தமது இறைமையை இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். போரால் பறிக்க முடியாமல் போன நாகலாந்தின் இறைமையை இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் மடக்கிப் போட முனைந்து வருகிறது இந்திய அரசு.

ஆச்சே மக்களது இறைமையும் ஒல்லாந்தரால் பறிக்கப்பட்டது. பின்னர் ஆச்சே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு கையளிக்கப்பட்டது. இந்தோனேஷிய தீவுகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்றபோது ஆச்சே மக்கள் இந்தோனேஷிய பெரும்பான்மை அரசின்கீழ் கொண்டுவரப்பட்டனர். ஆயினும் அவர்கள் இன்றுவரை தமது இறைமையை விட்டுக்கொடுக்காது போராடி வருகின்றனர்.

1947இல் இலங்கைக்கு பிரித்தானியா சுதந்திரத்தை வழங்கியபோது உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு சிங்களப் பெரும்பான்மையின் இறைமைக்குரியதாக மட்டுமே உள்ளது. இதில் தமிழர்கள் ஒரு காலனியாதிக்க கீழ்நிலையிலேயே வாழ வேண்டி வரும். இந்த யாப்பின் கீழ் அவர்கள் தமது இறைமையை இம்மியளவும் செயல்படுத்த முடியாது என்ற அடிப்படையில் தமிழர் அதை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி தமிழ் காங்கிரஸ் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தமிழர் தாயகத்தில் அந்நேரம் இருந்த 13 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அது போட்டியிட்டு 7இல் வெற்றி பெற்றது. சோல்பரி ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஆதரித்த ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு கிழக்கில் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதனடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேறு மாற்றுத் தீர்வு இல்லாததாலும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் காங்கிரஸ் பிரித்தானிய அரசைக் கேட்டுக் கொண்டது. இங்கு தெளிவாக நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது தமிழ் மக்கள் தமது இறைமையை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசுருவாக்கத்தில் இம்மியளவும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதே அதுவாகும். இதன் பின் வந்த சிங்கக் கொடி தமிழர் தாயகத்தை அழித்திடும் சிங்களக் குடியேற்றங்கள், தனிச் சிங்கள சட்டம், 1958 தமிழர் படுகொலை, வடக்கு கிழக்கில் நடைபெற்ற அமைதி வழி அரசியல் போராட்டங்களின் மீது சிங்களப் படைகள் ஏவப்பட்டமை ஆகியன தமிழர் தமது இறைமையை எந்த வகையிலும் சிங்கள் பேரினவாத ஒற்றையாட்சியினுள் விட்டுக்கொடுக்க முடியாதென்பது உறுதிப்படுத்தின.

1972இல் சிங்கள தேசம் தனது முழு இறைமையை நிலைநாட்டும் வகையில் ஒரு சிங்கள மேலாதிக்க அரசியல் யாப்பை உருவாக்க முனைந்தது. இந்த முயற்சியில் தமிழருடைய இறைமை ஒரு பகுதியாகவேனும் உள்ளடக்கப்படாது விட்டால் தனது ஒற்றையாட்சி அமைப்பு அதனூடாக நாட்டின் தேசிய செல்வத்தையும் நிர்வாகத்தையும் தனது கைக்குள் மட்டுமே வைத்திருப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாது போய் விடும் என்பதை சிங்கள மேலாண்மையாளர் உணர்ந்தனர். எனவே மறைந்த திரு.எம்.திருச்செல்வம் அவர்களூடாக தந்தை செல்வாவை ஆசைகாட்டி புதிய அரசியல் யாப்பிற்கு உடன்பட வைக்கப் பார்த்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

1972இல் தந்தை செல்வா தமது நாடாளுமன்ற பதவியை துறந்ததும் 1974இல் மீண்டும் போட்டியிட்டதும் தமிழ் மக்கள் தமது இறைமையை தாமாக பிரயோகிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்ற அடிப்படையிலேயாகும். இதையே வட்டுக்கோட்டைத் தீர்மானம் விரிவாக எடுத்தியம்பியது.

1978இல் மிக மிக இறுக்கமான ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியபோதும் அதில் தமிழரை அணைக்கும் முயற்சி எள்ளளவேனும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னர் நடைபெற்ற அனைத்தும் (பயங்கரவாத தடைச் சட்டம், யாழ். நூலக எரிப்பு, 83 தமிழர் படுகொலை இன்னோரன்ன) சிங்கள மேலாண்மை ஒற்றையாட்சியினுள் தமிழர் பாதுகாப்பாக வாழ்வதானால் தமது இறைமையை தாமாகவே செயல்படுத்துவதைவிட வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த வகையில் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோக்கில் தமிழர் மேற்கொள்ளும் எந்த பேச்சுவார்த்தையும் அவர்களுடைய கைவிடப்படா முழு இறைமையின் அடித்தளத்தில் நின்றே செய்யப்பட வேண்டும் என்பதே வரலாற்றுக் கட்டாயமாகும்.

டி. சிவராம் 22.06.2003

Monday, April 20, 2009

தமிழர் போராட்டமும் பெருஞ் செஞ்சீனமும்

1979 ஆம் ஆண்டு இலங்கைக்கான சீனத் தூதுவர் தமிழீழம் உருவாகினால் அவருடைய நாடு அதை எவ்வாறு நோக்கும் என்பது பற்றி சென்ற வாரம் பேராசிரியர் வில்சனிடம் சொன்னதைப் பற்றி எழுதியிருந்தேன். தமிழீழம் ஒரு ரஷ்யச் சார்பு சோசலிச நாடாக இருக்கும் என அவர் கூறியதற்கு வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழக் குடியரசின் பொருளாதாரம், சமூகம் என்பன எவ்வாறு அமைய வேண்டுமெனக் கூறப்பட்ட விடயங்கள் ஒரு முக்கியமான காரணமாயிருக்கலாம் எனக் கருதிட இடமுண்டு.

தமிழீழம் என்ற தனிநாடு சீனாவோடு அன்று முரண்பட்டு நின்ற சோவியத் யூனியனுக்குச் சார்பாக இருக்கும் என்ற அவரது கருதுகோளுக்கும் அதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் தனக்குச் சாதகமான ஆபிரிக்க நாடுகள் என்பவற்றுடனான சீனாவின் தொடர்பு பாதிக்கப்படும் என அவர் கூறியதன் உட்கிடை என்ன? அன்றைய காலகட்டத்தில் சோவியத் யூனியனும் இந்தியாவும் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தன. அவையிரண்டும் சீனாவுடன் முரண்பட்டிருந்தன. இவ்வாறான ஒரு சூழலில் தமிழீழம் ஒரு தனிநாடாக உருவானால் அது தன்னை பாதிக்கும் என சீனா கருதியதில் ஒரு முக்கிய உண்மை வெளிப்படுகிறது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

சீனாவின் பெரும் பொருளாதாரம் மிகத் துரிதமாக வளர்ந்து நவீனமயமாகி வருகின்றது. இந்தப் பொருளாதாரம் தங்கு தடையின்றி இயங்குவதற்கு எண்ணெய் மற்றும் நிலவாயு என்பன இன்றியமையாதனவாகும். சீனாவின் பொருளாதாரம் இயங்குவதற்குத் தேவையான மொத்த எரிபொருளின் 60சதவீதம் இலங்கையின் வடக்கு கிழக்கை அண்டிச் செல்லும் கடற்பாதைகள் வழியாகவே போகிறது. இக்கடற்பாதைகள் இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தமான் நிக்கோபாத் தீவுகளைத் தழுவி குறுகலான மலாக்கா நீரிணை ஊடாக தென் சீனக் கடலை அடைகின்றன. சோவியத் யூனியனுக்கு சார்பான நாடாக தமிழீழம் உருவாகிற்று என வைத்துக் கொள்வோம்.

சீனாவிற்கு இந்தியாவுடனோ சோவியத் யூனியனுடனோ அன்று ஒரு பெரும் முறுகல் நிலை தோன்றியிருந்தால் இலங்கையின் வடக்கு கிழக்கை அண்டி மலாக்கா நீரிணையூடாகச் செல்லும் கடற்பாதையை சீனா பயன்படுத்த முடியாதபடிக்கு தமிழீழ அரசின் கடற் செயற்பாடுகள் தவிர்க்க முடியாதபடி அமைந்து விடலாம். வளைகுடா நாடுகளுடனும் தனக்குச் சாதகமான அபிவிருத்தி நாடுகளுடனுமான தனது தொடர்புகளை குறிப்பாக எரிபொருள் வரவை இது பெரும் பாதிப்புக்குள்ளாக்கலாம் என்பதே சீனத் தூதுவர் அன்று பேராசிரியர் வில்சனிடம் தெரிவித்த கருத்தின் உட்கிடையாகும்.

அதாவது தனது பொருளாதார இருப்பு, தனது பாதுகாப்பு என்பவற்றிற்கு அடிப்படையாக சீனா போடும் கணக்கில் தமிழர் தாயகத்தின் எதிர்காலமும் இன்றியமையாதவாறு அடங்குகிறது என்பதை நாங்கள் அவருடைய கூற்றிலிருந்து மட்டுமல்ல கடந்த பத்தாண்டு காலத்தில் இது மகாகடலிலும் அதை அண்டிய கேந்திர முக்கியமான இடங்களிலும் நடைபெற்று வரும் மாற்றங்களையும் அவற்றில் சீனாவின் பங்கையும் அவதானித்தோமேயானால் நன்கு புரியும்.

சீனா ஆசியாவின் மிகப்பெரிய நாடு. தன்னுடைய பொருளாதார மேம்பாட்டிற்கும் எரிபொருட் பாதுகாப்பிற்கும் போர்வலு மேலாண்மைக்கும் அடிப்படையாக அது கொள்கின்ற விடயங்களில் வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும் முக்கயமானவையாகும். ஆசியக்கண்டத்தின் கடல் இந்துமா கடலாகும். எனவே ஆசியாவின் முதன்மை வல்லரசாக விரும்பும் எந்தவொரு நாடும் அதன் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புவது இயற்கை.

ஆனால் ஆசியாவின் மிகப் பெரிய நாடாக சீனா இருந்த போதும் அதற்கு இந்து சமுத்திரத்தின் நேரடி புவியியற் தொடர்பு இல்லை. நாம் மேற்குறிப்பிட்டது போல் இக்கடற்பிராந்தியத்தில் குறிப்பாக அரபிக் கடல், வங்காள விரிகுடா என்பவற்றில் உள்ள கடற்பாதைகள் சீனாவின் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், அதன் ஆசிய மேலாண்மைக்கும் குன்றியமையாதனவாக உள்ளன. இந்தச் சிக்கலை சீனா இரண்டு வழிகளில் அணுகுகின்றது. ஒன்று தனக்கும் இந்து மாகடலுக்கும் இடையில் புவியியற் தொடர்ச்சியாக அமைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுடன் நீண்ட காலமாக மிக இறுக்கமான தொடர்புகளை வளர்த்தெடுத்துள்ளது.

இதில் பாகிஸ்தான் அரபிக் கடலுக்கும், மியன்மார் வங்காள விரிகுடாவிற்கும் சீனாவிற்கு வழி சமைக்க உதவியுள்ளன. அரபிக்கடலை தரை வழியாக மிக விரைவாக அடைந்திடக் கூடிய வகையில் தனது எல்லையில் இருந்து பாகிஸ்தானின் முக்கிய அரபிக் கடல் துறைமுகப் பட்டணமான கராச்சி வரை ஒரு நெடுஞ்சாலையை சீனா உருவாக்கியுள்ளது. (கராக்கோரம் நெடுஞ்சாலை) மியன்மார் நாட்டின் இராணுவ ஆட்சியாளர் சீனச் சார்பாளராக உள்ளமையினால் வங்காள விரிகுடாவிற்கான தொடர்பும் சிக்கலில்லாமல் உள்ளது. இது மட்டுமின்றி மியன்மாரின் தென்மேற்கு கரையிலும் அதையண்டிய அந்தமான் தீவுக்கு வடக்காக உள்ள பெருங்கொக்கோ தீவிலும் (Grater Cocos Island) கடற் கண்காணிப்புக்கான தளங்களை சீனா கட்டியுள்ளது.

அடுத்ததாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் வட ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் உற்பத்தியாகும் நாடுகளிலிருந்தும் தனக்குத் தோவையானவற்றை கொண்டு வருவதற்கு இன்றியமையாத கடற்பாதைகளைப் பேணிடவும் சீனா நீண்ட காலமாக முயற்சி எடுத்து வருகிறது. இதில் குறிப்பிட்டளவு வெற்றியும் கண்டுள்ளது. இதில் தான் இலங்கையும் அதன் இனப் பிரச்சினையும் சீனாவின் பெரும்பாகத் திட்டமிடல் (Strategic Planing) முதன்மை பெறுகின்றன. ஈராக் குவைத் ஆகியவற்றின் கரையோரத்திலிருந்து பாரசீக வளை குடாவினூடாகவும் அதனுடைய குறு நீரிணையான கோமூர்ஸ் நீரீணையூடாகவும் (Hormuz Strait) அரபிக் கடல், மன்னர் வளைகுடா இலங்கையின் கிழக்கு கடற்கரை என்பவற்றின் வழியாகவும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தழுவி மலாக்கா நீரிணையூடாக தென் சீனக்கடலை சென்றடையும் பாதை மீது தனது ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க சீனா நீண்ட காலமாக முயற்சி எடுத்து வருகிறது.

மேற்படி கடற்பாதையில் தனது கப்பல்களின் பாதுகாப்பை எந்த நேரத்திலும் உறுதிப்படுத்துவதற்கும் அப்பாதையின் மீது மறைமுகமான மேலாதிக்கத்தை செலுத்துவதற்கும் சீனாவிற்கு நான்கு இடங்கள் முக்கியமானவை. அவற்றில் முதலாவது கோமுர்ஸ் நீரிணை. இதன் ஒரு முனையில் அமைந்துள்ளது ஈரானின் பன்டர் அப்பாஸ் துறைமுகம். இங்கு சீனா ஈரானுடன் கூட்டாக ஒரு பெரும் கடற்படைத்தளத்தை நிறுவி வருகிறது. அத்துடன் அந்நாட்டுடன் நெருக்கமான படைத்துறை உறவுகளை குறிப்பாக கடற்படை விடயங்களில் சீனா பல ஆண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது. அடுத்தது குவாடார் முனை. பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் மேற்படி கடற்பாதை அரபிக் கடலை சந்திக்கும் இடத்தில் இம்முனை பாகிஸ்தானின் தென் கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள பழைய துறைமுகத்தை திருத்தி பாகிஸ்தானுடன் கூட்டாக ஒரு கடற்படைத்தளத்தை சீனா நிறுவி வருகிறது. இது பற்றி அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் விமர்சிக்க தலைப்பட்ட போது குவாடார் துறைமுகப் போரியல் நோக்கில் விரிவாக்கப்பட வில்லை என சீனா கூறிற்று.

எனினும் அதை கவனமாக நோக்கும் போரியல் ஆய்வாளர்கள் குவாடார் ஒரு பெரும் கடற்படைத் தளமாக இயங்கக் கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகிறது எனக் கூறுவர். பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் மிக நீண்ட காலமாக இருந்த உறவும் அது எங்ஙனம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உறவுப்பாலம் ஏற்படுத்திட உதவிற்று என்பது போன்ற விடயங்கள் யாவரும் அறிந்தவையே என்பதால் இங்கு விரிவஞ்சி விடுகின்றேன். குவாடாருக்கு அடுத்தது இலங்கை வன்னியின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ள மன்னார் வளைகுடாவும் கிழக்கு கடற்கரையை அண்டிய வங்காள விரிகுடாப் பிராந்தியமும் சீனா மேலாதிக்கம் செலுத்த முயலுகின்ற கடற்பாதைக்கு இன்றியமையாதவை.

இது விடயத்திலும் தமது பெரும்பாகப் பொருளாதார மற்றும் போரியற் திட்டமிடலுக்கும் இலங்கை எந்தளவிற்கு முக்கியமென்பதை நீண்ட காலத்திற்கு முன்பே சீனா உணர்ந்து கவனமாகச் செயல்பட்டு வந்துள்ளது. சீனாவின் மிகத் தொலை நோக்குள்ள செயற்பாட்டிற்கு ஒன்றை உதாரணமாகக் கூறலாம். 1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் ராஜதந்திரிகளாக வேலை பார்ப்பதற்கென சில இளையவர்களைத் தெரிவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியில் படிக்க சீனா அனுப்பியது. இப்போதுள்ள இலங்கைக்கான தூதுவர் இவ்வாறு சிங்கள மொழி பயின்றவரே. இது மட்டுமின்றி சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் மிக இறுக்கமான உறவுகளையும் வளர்த்தெடுத்தது.

சிங்கள ஆட்சியாளருக்கு இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்கள் தொடர்பாக இருந்த அச்சங்களை சீனா தனக்குச் சாதகமாக பயன்படுத்த தவறவில்லை. 1970 களில் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பதவியில் இருந்த காலத்திலிருந்து இரண்டு முக்கியமான விடயங்களில் சீனா நீண்ட கால முதலீட்டை செய்யலாயிற்று. ஒன்று ஸ்ரீலங்காவின் கடற்படை, இரண்டு ஸ்ரீலங்காவின் எரிபொருள் துறை. இக்காலகட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா கடற்படையினருக்கும் சீனாவிற்கும் இடையில் இன்றியமையாதபடி நெருங்கிய உறவுகள் உருவாகியமை அனைவரும் அறிந்ததே.

1987 ஆம் ஆண்டில் இலங்கையினுடைய துறைமுகங்கள் எவையும் திருகோணமலையிலுள்ள எரிபொருள் குதங்களும் இந்தியாவின் அனுமதியின்றி பயன்படுத்தபட முடியாது என டில்லியுடன் ஜே.ஆர். அரசு ஒப்பந்தம் செய்து கொண்டதால் சீனாவின் பல நோக்கங்கள் தடைப்பட்டன. இந்தியா மேற்படி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு அமெரிக்கா மட்டுமல்ல சீனாவின் இலங்கை மீதான அக்கறையும் ஒரு காரணமெனக் கூறப்படுகின்றது.

குவாடார் முனைக்கு அடுத்ததாக முக்கியமாக அமைந்த இடமான இலங்கையின் கடல் எல்லையில் செல்வாக்கை உருவாக்க வேண்டிய தேவையும் இங்கு எரிபொருளை பெரியளவில் திரட்டி வைக்க வேண்டிய தேவையும் தனது கடற்பாதையை பேணுவதற்கு சீனாவிற்கு அவசியமாயிற்று. இந்த வகையில் இரண்டாயிரம் ஆண்டு மே மாதமளவில் கொழும்புக்கு வடக்காகவுள்ள முத்துராஜவெல பகுதியில் திருகோணமலையில் உள்ளதைப் போன்ற 33 குதங்களைக் கொண்ட ஒரு எண்ணெய் களஞ்சியத்தையும் அதை கடலில் நின்றவாறே கப்பல் பயன்படுத்தக் கூடிய ஒரு தளத்தையும் கட்டுவதற்கான ஒப்பந்தமொன்றை சந்திரிக்கா அரசுடன் சீனா செய்து கொண்டது.

திருகோணமலை களஞ்சியங்களுக்கு மாற்றீடாகவே இதை சீனா உருவாக்க முனைந்தது. வளை குடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் செல்லும் கடற் பாதையின் சரி நடுவில் இலங்கை இருப்பதால் இங்கு எரிபொருள் களஞ்சியப்படுத்தல் சீனாவிற்கு இன்றியமையாத தேவையாகும். இந்து மகா கடலின் இலங்கையின் இந்த நடு நாயகமான அமைவை கருத்திற்கொண்டே பிரித்தானிய பேரரசு திருமலையில் எண்ணெய் குதங்களை அமைத்தது என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். எனினும் சீனாவின் இந்த கேந்திர முன்னெடுப்புக்களை தடுப்பதற்கு இவை யாவும் முயற்சிகளை எடுக்கலாயிற்று. இந்த எண்ணெய் நிறுவனம் இங்கு பெரியளவு அண்மையில் காலூன்றியமைக்கு சீனாவின் நடவடிக்கைகளும் காரணம் என நம்பப்படுகிறது.

தனது கடற்பாதை பாதுகாப்புக்கும் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளை இலங்கையில் இந்தியா தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் நிலை தொலைவில் தென்படத் தொடங்கிய காலத்திலிருந்து சீனா இந்தியாவுடன் எவ்வித ஒப்பந்த கடப்பாடுமற்ற மாலைதீவு அரசுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை எடுத்தலாயிற்று இதன் உச்ச கட்டமாக 2001 ஆம் ஆண்டு மே மாதமளவில் சீன அதிபர் மாலைதீவுக்கு சென்ற வேளையில் அந்நாட்டின் மரோ என்ற தீவில் தளம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனா செய்து கொண்டது. இதன்பின்னரும் இலங்கை மீதான சீனாவின் அக்கறை குறைந்து விட்டது என நாம் கூற முடியாது.

மாலைதீவில் தளம் இருந்தாலும் இலங்கையிலும் அதையண்டிய கடல் பரப்பில் தனது நலன்களுக்கு சாதகமற்ற சக்திகள் தலையெடுத்ததால் அது தனது கடற்பாதை பாதுகாப்பிற்கு குந்தகமாக அமையுமென சீனா கருதுகிறது.

இதில் முக்கியமாக இலங்கையை தான் மலாக்கா நீரிணைக்குள் செல்கின்ற நுழைவாயிலில் இந்தியா செலுத்தி வருகிற ஆதிக்கமும் இலங்கை தொடர்பான அக்கறையினை சீனாவுக்கு ஏற்படுத்துகின்றது.

06.07.2003 சிவராம்.