1979 ஆம் ஆண்டு இலங்கைக்கான சீனத் தூதுவர் தமிழீழம் உருவாகினால் அவருடைய நாடு அதை எவ்வாறு நோக்கும் என்பது பற்றி சென்ற வாரம் பேராசிரியர் வில்சனிடம் சொன்னதைப் பற்றி எழுதியிருந்தேன். தமிழீழம் ஒரு ரஷ்யச் சார்பு சோசலிச நாடாக இருக்கும் என அவர் கூறியதற்கு வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழக் குடியரசின் பொருளாதாரம், சமூகம் என்பன எவ்வாறு அமைய வேண்டுமெனக் கூறப்பட்ட விடயங்கள் ஒரு முக்கியமான காரணமாயிருக்கலாம் எனக் கருதிட இடமுண்டு.
தமிழீழம் என்ற தனிநாடு சீனாவோடு அன்று முரண்பட்டு நின்ற சோவியத் யூனியனுக்குச் சார்பாக இருக்கும் என்ற அவரது கருதுகோளுக்கும் அதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் தனக்குச் சாதகமான ஆபிரிக்க நாடுகள் என்பவற்றுடனான சீனாவின் தொடர்பு பாதிக்கப்படும் என அவர் கூறியதன் உட்கிடை என்ன? அன்றைய காலகட்டத்தில் சோவியத் யூனியனும் இந்தியாவும் நெருங்கிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தன. அவையிரண்டும் சீனாவுடன் முரண்பட்டிருந்தன. இவ்வாறான ஒரு சூழலில் தமிழீழம் ஒரு தனிநாடாக உருவானால் அது தன்னை பாதிக்கும் என சீனா கருதியதில் ஒரு முக்கிய உண்மை வெளிப்படுகிறது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.
சீனாவின் பெரும் பொருளாதாரம் மிகத் துரிதமாக வளர்ந்து நவீனமயமாகி வருகின்றது. இந்தப் பொருளாதாரம் தங்கு தடையின்றி இயங்குவதற்கு எண்ணெய் மற்றும் நிலவாயு என்பன இன்றியமையாதனவாகும். சீனாவின் பொருளாதாரம் இயங்குவதற்குத் தேவையான மொத்த எரிபொருளின் 60சதவீதம் இலங்கையின் வடக்கு கிழக்கை அண்டிச் செல்லும் கடற்பாதைகள் வழியாகவே போகிறது. இக்கடற்பாதைகள் இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தமான் நிக்கோபாத் தீவுகளைத் தழுவி குறுகலான மலாக்கா நீரிணை ஊடாக தென் சீனக் கடலை அடைகின்றன. சோவியத் யூனியனுக்கு சார்பான நாடாக தமிழீழம் உருவாகிற்று என வைத்துக் கொள்வோம்.
சீனாவிற்கு இந்தியாவுடனோ சோவியத் யூனியனுடனோ அன்று ஒரு பெரும் முறுகல் நிலை தோன்றியிருந்தால் இலங்கையின் வடக்கு கிழக்கை அண்டி மலாக்கா நீரிணையூடாகச் செல்லும் கடற்பாதையை சீனா பயன்படுத்த முடியாதபடிக்கு தமிழீழ அரசின் கடற் செயற்பாடுகள் தவிர்க்க முடியாதபடி அமைந்து விடலாம். வளைகுடா நாடுகளுடனும் தனக்குச் சாதகமான அபிவிருத்தி நாடுகளுடனுமான தனது தொடர்புகளை குறிப்பாக எரிபொருள் வரவை இது பெரும் பாதிப்புக்குள்ளாக்கலாம் என்பதே சீனத் தூதுவர் அன்று பேராசிரியர் வில்சனிடம் தெரிவித்த கருத்தின் உட்கிடையாகும்.
அதாவது தனது பொருளாதார இருப்பு, தனது பாதுகாப்பு என்பவற்றிற்கு அடிப்படையாக சீனா போடும் கணக்கில் தமிழர் தாயகத்தின் எதிர்காலமும் இன்றியமையாதவாறு அடங்குகிறது என்பதை நாங்கள் அவருடைய கூற்றிலிருந்து மட்டுமல்ல கடந்த பத்தாண்டு காலத்தில் இது மகாகடலிலும் அதை அண்டிய கேந்திர முக்கியமான இடங்களிலும் நடைபெற்று வரும் மாற்றங்களையும் அவற்றில் சீனாவின் பங்கையும் அவதானித்தோமேயானால் நன்கு புரியும்.
சீனா ஆசியாவின் மிகப்பெரிய நாடு. தன்னுடைய பொருளாதார மேம்பாட்டிற்கும் எரிபொருட் பாதுகாப்பிற்கும் போர்வலு மேலாண்மைக்கும் அடிப்படையாக அது கொள்கின்ற விடயங்களில் வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும் முக்கயமானவையாகும். ஆசியக்கண்டத்தின் கடல் இந்துமா கடலாகும். எனவே ஆசியாவின் முதன்மை வல்லரசாக விரும்பும் எந்தவொரு நாடும் அதன் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புவது இயற்கை.
ஆனால் ஆசியாவின் மிகப் பெரிய நாடாக சீனா இருந்த போதும் அதற்கு இந்து சமுத்திரத்தின் நேரடி புவியியற் தொடர்பு இல்லை. நாம் மேற்குறிப்பிட்டது போல் இக்கடற்பிராந்தியத்தில் குறிப்பாக அரபிக் கடல், வங்காள விரிகுடா என்பவற்றில் உள்ள கடற்பாதைகள் சீனாவின் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும், அதன் ஆசிய மேலாண்மைக்கும் குன்றியமையாதனவாக உள்ளன. இந்தச் சிக்கலை சீனா இரண்டு வழிகளில் அணுகுகின்றது. ஒன்று தனக்கும் இந்து மாகடலுக்கும் இடையில் புவியியற் தொடர்ச்சியாக அமைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுடன் நீண்ட காலமாக மிக இறுக்கமான தொடர்புகளை வளர்த்தெடுத்துள்ளது.
இதில் பாகிஸ்தான் அரபிக் கடலுக்கும், மியன்மார் வங்காள விரிகுடாவிற்கும் சீனாவிற்கு வழி சமைக்க உதவியுள்ளன. அரபிக்கடலை தரை வழியாக மிக விரைவாக அடைந்திடக் கூடிய வகையில் தனது எல்லையில் இருந்து பாகிஸ்தானின் முக்கிய அரபிக் கடல் துறைமுகப் பட்டணமான கராச்சி வரை ஒரு நெடுஞ்சாலையை சீனா உருவாக்கியுள்ளது. (கராக்கோரம் நெடுஞ்சாலை) மியன்மார் நாட்டின் இராணுவ ஆட்சியாளர் சீனச் சார்பாளராக உள்ளமையினால் வங்காள விரிகுடாவிற்கான தொடர்பும் சிக்கலில்லாமல் உள்ளது. இது மட்டுமின்றி மியன்மாரின் தென்மேற்கு கரையிலும் அதையண்டிய அந்தமான் தீவுக்கு வடக்காக உள்ள பெருங்கொக்கோ தீவிலும் (Grater Cocos Island) கடற் கண்காணிப்புக்கான தளங்களை சீனா கட்டியுள்ளது.
அடுத்ததாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் வட ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் உற்பத்தியாகும் நாடுகளிலிருந்தும் தனக்குத் தோவையானவற்றை கொண்டு வருவதற்கு இன்றியமையாத கடற்பாதைகளைப் பேணிடவும் சீனா நீண்ட காலமாக முயற்சி எடுத்து வருகிறது. இதில் குறிப்பிட்டளவு வெற்றியும் கண்டுள்ளது. இதில் தான் இலங்கையும் அதன் இனப் பிரச்சினையும் சீனாவின் பெரும்பாகத் திட்டமிடல் (Strategic Planing) முதன்மை பெறுகின்றன. ஈராக் குவைத் ஆகியவற்றின் கரையோரத்திலிருந்து பாரசீக வளை குடாவினூடாகவும் அதனுடைய குறு நீரிணையான கோமூர்ஸ் நீரீணையூடாகவும் (Hormuz Strait) அரபிக் கடல், மன்னர் வளைகுடா இலங்கையின் கிழக்கு கடற்கரை என்பவற்றின் வழியாகவும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைத் தழுவி மலாக்கா நீரிணையூடாக தென் சீனக்கடலை சென்றடையும் பாதை மீது தனது ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க சீனா நீண்ட காலமாக முயற்சி எடுத்து வருகிறது.
மேற்படி கடற்பாதையில் தனது கப்பல்களின் பாதுகாப்பை எந்த நேரத்திலும் உறுதிப்படுத்துவதற்கும் அப்பாதையின் மீது மறைமுகமான மேலாதிக்கத்தை செலுத்துவதற்கும் சீனாவிற்கு நான்கு இடங்கள் முக்கியமானவை. அவற்றில் முதலாவது கோமுர்ஸ் நீரிணை. இதன் ஒரு முனையில் அமைந்துள்ளது ஈரானின் பன்டர் அப்பாஸ் துறைமுகம். இங்கு சீனா ஈரானுடன் கூட்டாக ஒரு பெரும் கடற்படைத்தளத்தை நிறுவி வருகிறது. அத்துடன் அந்நாட்டுடன் நெருக்கமான படைத்துறை உறவுகளை குறிப்பாக கடற்படை விடயங்களில் சீனா பல ஆண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது. அடுத்தது குவாடார் முனை. பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் மேற்படி கடற்பாதை அரபிக் கடலை சந்திக்கும் இடத்தில் இம்முனை பாகிஸ்தானின் தென் கரையோரம் அமைந்துள்ளது. இங்குள்ள பழைய துறைமுகத்தை திருத்தி பாகிஸ்தானுடன் கூட்டாக ஒரு கடற்படைத்தளத்தை சீனா நிறுவி வருகிறது. இது பற்றி அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் விமர்சிக்க தலைப்பட்ட போது குவாடார் துறைமுகப் போரியல் நோக்கில் விரிவாக்கப்பட வில்லை என சீனா கூறிற்று.
எனினும் அதை கவனமாக நோக்கும் போரியல் ஆய்வாளர்கள் குவாடார் ஒரு பெரும் கடற்படைத் தளமாக இயங்கக் கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகிறது எனக் கூறுவர். பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் மிக நீண்ட காலமாக இருந்த உறவும் அது எங்ஙனம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் உறவுப்பாலம் ஏற்படுத்திட உதவிற்று என்பது போன்ற விடயங்கள் யாவரும் அறிந்தவையே என்பதால் இங்கு விரிவஞ்சி விடுகின்றேன். குவாடாருக்கு அடுத்தது இலங்கை வன்னியின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ள மன்னார் வளைகுடாவும் கிழக்கு கடற்கரையை அண்டிய வங்காள விரிகுடாப் பிராந்தியமும் சீனா மேலாதிக்கம் செலுத்த முயலுகின்ற கடற்பாதைக்கு இன்றியமையாதவை.
இது விடயத்திலும் தமது பெரும்பாகப் பொருளாதார மற்றும் போரியற் திட்டமிடலுக்கும் இலங்கை எந்தளவிற்கு முக்கியமென்பதை நீண்ட காலத்திற்கு முன்பே சீனா உணர்ந்து கவனமாகச் செயல்பட்டு வந்துள்ளது. சீனாவின் மிகத் தொலை நோக்குள்ள செயற்பாட்டிற்கு ஒன்றை உதாரணமாகக் கூறலாம். 1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் ராஜதந்திரிகளாக வேலை பார்ப்பதற்கென சில இளையவர்களைத் தெரிவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியில் படிக்க சீனா அனுப்பியது. இப்போதுள்ள இலங்கைக்கான தூதுவர் இவ்வாறு சிங்கள மொழி பயின்றவரே. இது மட்டுமின்றி சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் மிக இறுக்கமான உறவுகளையும் வளர்த்தெடுத்தது.
சிங்கள ஆட்சியாளருக்கு இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்கள் தொடர்பாக இருந்த அச்சங்களை சீனா தனக்குச் சாதகமாக பயன்படுத்த தவறவில்லை. 1970 களில் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பதவியில் இருந்த காலத்திலிருந்து இரண்டு முக்கியமான விடயங்களில் சீனா நீண்ட கால முதலீட்டை செய்யலாயிற்று. ஒன்று ஸ்ரீலங்காவின் கடற்படை, இரண்டு ஸ்ரீலங்காவின் எரிபொருள் துறை. இக்காலகட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா கடற்படையினருக்கும் சீனாவிற்கும் இடையில் இன்றியமையாதபடி நெருங்கிய உறவுகள் உருவாகியமை அனைவரும் அறிந்ததே.
1987 ஆம் ஆண்டில் இலங்கையினுடைய துறைமுகங்கள் எவையும் திருகோணமலையிலுள்ள எரிபொருள் குதங்களும் இந்தியாவின் அனுமதியின்றி பயன்படுத்தபட முடியாது என டில்லியுடன் ஜே.ஆர். அரசு ஒப்பந்தம் செய்து கொண்டதால் சீனாவின் பல நோக்கங்கள் தடைப்பட்டன. இந்தியா மேற்படி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு அமெரிக்கா மட்டுமல்ல சீனாவின் இலங்கை மீதான அக்கறையும் ஒரு காரணமெனக் கூறப்படுகின்றது.
குவாடார் முனைக்கு அடுத்ததாக முக்கியமாக அமைந்த இடமான இலங்கையின் கடல் எல்லையில் செல்வாக்கை உருவாக்க வேண்டிய தேவையும் இங்கு எரிபொருளை பெரியளவில் திரட்டி வைக்க வேண்டிய தேவையும் தனது கடற்பாதையை பேணுவதற்கு சீனாவிற்கு அவசியமாயிற்று. இந்த வகையில் இரண்டாயிரம் ஆண்டு மே மாதமளவில் கொழும்புக்கு வடக்காகவுள்ள முத்துராஜவெல பகுதியில் திருகோணமலையில் உள்ளதைப் போன்ற 33 குதங்களைக் கொண்ட ஒரு எண்ணெய் களஞ்சியத்தையும் அதை கடலில் நின்றவாறே கப்பல் பயன்படுத்தக் கூடிய ஒரு தளத்தையும் கட்டுவதற்கான ஒப்பந்தமொன்றை சந்திரிக்கா அரசுடன் சீனா செய்து கொண்டது.
திருகோணமலை களஞ்சியங்களுக்கு மாற்றீடாகவே இதை சீனா உருவாக்க முனைந்தது. வளை குடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் செல்லும் கடற் பாதையின் சரி நடுவில் இலங்கை இருப்பதால் இங்கு எரிபொருள் களஞ்சியப்படுத்தல் சீனாவிற்கு இன்றியமையாத தேவையாகும். இந்து மகா கடலின் இலங்கையின் இந்த நடு நாயகமான அமைவை கருத்திற்கொண்டே பிரித்தானிய பேரரசு திருமலையில் எண்ணெய் குதங்களை அமைத்தது என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். எனினும் சீனாவின் இந்த கேந்திர முன்னெடுப்புக்களை தடுப்பதற்கு இவை யாவும் முயற்சிகளை எடுக்கலாயிற்று. இந்த எண்ணெய் நிறுவனம் இங்கு பெரியளவு அண்மையில் காலூன்றியமைக்கு சீனாவின் நடவடிக்கைகளும் காரணம் என நம்பப்படுகிறது.
தனது கடற்பாதை பாதுகாப்புக்கும் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளை இலங்கையில் இந்தியா தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் நிலை தொலைவில் தென்படத் தொடங்கிய காலத்திலிருந்து சீனா இந்தியாவுடன் எவ்வித ஒப்பந்த கடப்பாடுமற்ற மாலைதீவு அரசுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை எடுத்தலாயிற்று இதன் உச்ச கட்டமாக 2001 ஆம் ஆண்டு மே மாதமளவில் சீன அதிபர் மாலைதீவுக்கு சென்ற வேளையில் அந்நாட்டின் மரோ என்ற தீவில் தளம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சீனா செய்து கொண்டது. இதன்பின்னரும் இலங்கை மீதான சீனாவின் அக்கறை குறைந்து விட்டது என நாம் கூற முடியாது.
மாலைதீவில் தளம் இருந்தாலும் இலங்கையிலும் அதையண்டிய கடல் பரப்பில் தனது நலன்களுக்கு சாதகமற்ற சக்திகள் தலையெடுத்ததால் அது தனது கடற்பாதை பாதுகாப்பிற்கு குந்தகமாக அமையுமென சீனா கருதுகிறது.
இதில் முக்கியமாக இலங்கையை தான் மலாக்கா நீரிணைக்குள் செல்கின்ற நுழைவாயிலில் இந்தியா செலுத்தி வருகிற ஆதிக்கமும் இலங்கை தொடர்பான அக்கறையினை சீனாவுக்கு ஏற்படுத்துகின்றது.
06.07.2003 சிவராம்.
Monday, April 20, 2009
தமிழர் போராட்டமும் பெருஞ் செஞ்சீனமும்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment