Sunday, January 20, 2008

மாமனிதர் சிவராம் ஒரு அஞ்சலிக்குறிப்பு

மாமனிதர் சிவராம் ஒரு அஞ்சலிக்குறிப்பு

-சிவராமின் மரணத்தின் பின்னர் பரணி பிரான்ஸிலிருந்து எழுதிய கட்டுரை இது -

சிவராம் தமிழ் பரப்பில் அறிமுகம் தேவையில்லாத மனிதர். ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு கோணங்களில் அறிமுகமானவர். எனது ஞாபகம் எனக்கு சரியாக துணைபுரிகிறது என்றால் அது 90 களின் நடுப்பகுதி என நினைக்கிறேன். The Island பத்திரிகை ஒன்றை முன்னால் வீசிய என் பால்ய நண்பன் ஒருவன் மூலம் ஒற்றைச் சொல்லில் அறிமுகமானார்.
அது 'துரோகி".

பின்னாளில் அவர் மூலம் பல துரோகிகள் அம்பலத்திற்கு வரப்போவதும், அத்தகையவர்களாலேயே அவர் கொல்லப்படப் போவதும் போன்ற செய்திகளை என்னால் அப்போது உணர முடியவில்லை. ஒரு சட்டகத்திற்குள் வைத்து மதிப்பிட முடியாமல் ஒரு புதிராகத்தான் இருந்தார். இறந்த பின்னும் அது தொடர்கிறது....

இதழியல் துறையில் நான் நுழைந்தவுடன் சிவராம் குறித்து கட்டமைத்திருந்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்கியது.

என் ஆதர்ஷ புருஷர்களில் ஒருவராக அவர் உருமாறத் தொடங்கினார் - எனது விருப்பு வெறுப்புகளிற்கும் அப்பால்.... ஆனால் அவர் குறித்த மதிப்பீடுகளை காலத்திற்குக் காலம் மாற்றிக்கொண்டே இருந்தேன். நான் மாற்றினேன் என்பதை விட அதற்கான புறச்செயற்பாடுகளில் அவர் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் என்பதே உண்மை.

அவர் படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட சக பத்திரிகை நண்பர்களிடம் அவரது அண்மைய சில கட்டுரைகளைச் சுட்டிக்காட்டி அவரைத் திட்டித் தீர்த்திருந்தேன். இப்பொழுது நினைத்தால் நெஞ்சிற்குள் பந்தாய் அடைத்துக்கொள்கிறது வலியும், துயரமும். சேர்ந்தும் பிரிந்தும் மாறி மாறிப் பயணித்த அந்த எழுத்துப் போராளிக்கும் எனக்குமிடையிலான பயணத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.

நான் சிவராம் அவர்களை பாரிஸ் ஈழமுரசு அலுவலகத்தில் வைத்து 2000 இன் நடுப்பகுதிகளில்தான் முதல் முதலில் சந்தித்தேன். அவரது சிம்மக்குரலும், வசீகரமான பேச்சும் நெடுநாள் பழகிய நண்பர் போன்ற தோழமையும் நான் அவர் குறித்து கட்டமைத்திருந்த கற்பனைகளை மீண்டும் ஒருமுறை தகர்த்தது. அவசர பயணமாக பாரிஸ் வந்திருந்த அவர் அரைமணி நேரத்தில் எம்மிடமிருந்து விடைபெற்றார். அந்தத் தருணத்தில் எனக்கு 'சிவராம் காய்ச்சல்" அடிக்கத் தொடங்கியிருந்தது.

ஏற்கனவே ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர்களான சிவநாயகம், கோபாலரத்தினம் போன்றோர்களுடன் நீண்ட சந்திப்புக்களையும், உரையாடல்களையும் நிகழ்தியிருந்தாலும் கூட அவர்களிடமில்லாத ஏதோ ஒரு வசீகரம் அரை மணிநேரத்தில் என்னை சிவராம் வசம் வீழ்த்தியிருந்தது. அவர்கள் சிவராம் குறித்து சிலாகித்துப் பேசியது கூட காரணமாக இருக்கலாம்.

பின்பு இரண்டொரு தடவை பத்திரிகைப் பணி நிமித்தம் தொலைபேசியினு}டாக மட்டுமே அவருடன் உரையாட முடிந்தது. மீண்டும் அண்மையில் பாரிஸ் வந்தபோது ஒருவார காலம் ஈழமுரசு அலுவலகத்திலேயே பெரும்பாலும் இருந்தார். அப்போது தொடர்ச்சியாக நீண்ட நேரம் தனிமையில் அவருடன் உரையாட முடிந்தது. ஆனால் இந்தச் சந்திப்பில் அவருடன் மூர்க்கத்தனமாக முரண்பட்டேன். கருணா விவகாரத்தில் இவரது பங்கு குறித்து ஒரு வதந்தி நிலவியது அனைவரும் அறிந்ததே. என்னை அது கடும் சினத்திற்குள்ளாக்கி இருந்தது.

இலகுவில் அமைந்த சந்தர்ப்பத்தை நழுவவிட நான் தயாராக இல்லை. ஆரம்பத்தில் புளொட் இயக்கத்தில் அவரது செயற்பாடுகள் குறித்தும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஊடாக அவர் எழுதிய போராட்ட எதிர்ப்பு கட்டுரைகள் குறித்தும் அண்மையில் கருணா விவகாரத்தில் அவரது பங்கு குறித்தும் தொடர்ச்சியான கேள்விகளைத் து}க்கிப் போட்டேன். ஒரு வினாவிற்கான விடையுடன் அவர் நழுவிவிடலாம் என்ற ஐயத்தில் எல்லாச் சந்தேகங்களையும் ஒன்றாகப் போட்டுடைத்தேன்.

தானே தயாரித்த கோப்பி ஒன்றை என்னை நோக்கி நகர்த்திய அவர் நான் கேள்விக்கணைகளைத் தொடுப்பதற்கு முன்பிருந்த அதே முகபாவனையுடன் எந்தவித சலனமுமின்றி அமைதியாக என்னை நோக்கினார்.

'இதில் கருணா விவகாரத்;திற்கு மட்டும் பதில் சொல்லலாம் என்று நினைக்கிறேன், மற்றவை அவரவர் பார்வைக்கு உட்பட்டு எந்தவிதமாகவும் வாசித்துக்கொள்ளட்டும்" என்றவர் தொடர்ந்து 'ஒரு தவறு செய்தவன் திருந்தக்கூடாது - முடியாது என்று ஏதேனும் நியதி இருக்கிறதா" என்று கேட்டார்.

'நான் எனக்கு சரியென்று பட்டதையே செய்து வந்துள்ளேன். ஆனால் அதைச் சரியென்று என்றைக்கும் நியாயப்படுத்தப்போவதுமில்லை" என்றார்.

தீர்க்கமான பேச்சும் தெளிவான குரலும் அவர் குறித்த நியாயங்களை என் வசம் கொண்டுவந்து சேர்த்தது. கருணா விவகாரத்தில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்று குறிப்பிட்ட அவர்;, தான் கிழக்கின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து கருணாவுடன் உரையாடியவற்றையெல்லாம் தவறாகப் புரிந்துகொண்டு கருணா தன்னைத் தொடர்புகொண்டதாக ஒப்புக்கொண்டார். அதைத் தான் நிராகரித்ததன் தொடர்ச்சிதான் 'வீரகேசரிக் கடிதம்" என்றும் கூறினார்.

தேசியத்தைச் சிதைக்க நினைக்கும் அன்னிய சக்திகள், தமிழ்த் துரோகிகள், ஜே.வி.பி., கெல உறுமய போன்றவற்றின் மீதான தனது பார்வையை எடுத்துரைத்தார். தெளிவாகவும் தர்க்கமாகவும் அவர் கூறிய முறைமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவருடைய பெயருக்கும், புகழுக்கும் காரணம் அப்போது எனக்கு தெளிவாகப் புரியத்தொடங்கியிருந்தது.

ஒரு உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர் என் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய எந்த அவசியமும் கிடையாது. ஆனால் நின்று நிதானித்து ஆத்திரப்படாமல் பதில் சொன்ன பாங்கு இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.

அதுமட்டுமல்ல எனது கட்டுரைகள் சிலவற்றை வாசித்து பாராட்டினார். அதில் எந்தவித முகஸ்துதியும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் படையணி குறித்து நான் எழுதியிருந்த ஒரு கட்டுரையை எடுத்து அதை ஆழமாய் படித்தார். ஒரு நு}லுக்குரிய விடயங்களை ஒரு கட்டுரையாக சுருக்கிவிட்டாய் என்று குறிப்பிட்ட அவர் 'ஏன் இதை நீ ஒரு புத்தகமாக வெளியிடலாம்தானே" என்று கேட்டார். அத்தோடு எனக்குச் சில உலகப் பெண்கள் படையணி பற்றிய தகவல்கள், அவை சார்ந்த நு}ல்கள் இணையத் தளங்கள் என்றொரு பட்டியலையும் எழுதித்தந்தார். வாய் வழியாக மடைதிறந்த வெள்ளம் போல் உலகப் பெண்கள் படையணிகள் பற்றி ஒரு குட்டிச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இறுதியில் நான் கூறினேன,; 'நீங்கள் சொன்ன கருத்துக்களை வைத்து ஒரு புத்தகம் இல்லை பத்து புத்தகம் போடலாம்போல கிடக்குது"; என்று. முடிவில் நான் அதை புத்தகமாக எழுதினால் அதற்கு ஒரு முன்னுரை எழுதித்தருவதாகவும் குறிப்பிட்டார்.

எனது உடல் நடுங்கியது- சத்தியமான வார்த்தைகள். அவர் முன்னுரைக்காகவே எனது புத்தக வேலைகளில் அவசர அவசரமாக ஈடுபடத்தொடங்கி ஓரிரு நாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஒரு வாரகாலம் அவர் என்னுடன் பேசிய பல விடயங்களை எழுத்தில் கொண்டுவர முடியாத நிலையிலுள்ளேன். ஏனெனில் பல அந்நிய சக்திகளினதும் தமிழ்த்துரோகிகள் சிலரினதும் உண்மைமுகத்தை அப்பட்டமாகத் தோலுரித்திருந்தார். அவர்களால் தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்பதை உறுதிபடக்கூறினார். தனது கொலை ஒரு கூட்டணி சதியின் மொத்த வடிமாய் இருக்கும் என்பதையும் அழுத்தமாய்க் கூறினார்.

நான் 'கருணா இல்லையா?"; என்றேன். அவர் சிரித்தபடி 'கருணா அம்பு. எய்பவர்கள் இருக்க ஏன் அம்பை நோவான். அந்நிய சக்திகளுக்கும் சிங்கள புலனாய்வுத்துறைக்கும் விலைபோன ஒருவர் சுயமாக எப்படி என்னை கொல்ல முடியும். அவர்கள் பணித்தால் வேண்டுமென்றால் கூடுதல் இன்ட்ரஸ்ட் எடுத்து வந்து என்னை கொல்லலாம். அவ்வளவுதான் மேற்றர். கருணாவை நோகிறதை விட்டு ஒட்டுமொத்தமாக தமிழ்த்துரோக சக்திகள் எல்லோரையும் ஒன்றாக களையெடுக்கிறது பற்றித்தான் நாங்கள் சிந்திக்க வேண்டும்" என்றார்.

இன்று அவரது படுகொலையில் இலங்கை புலனாய்வுத்துறையினர் அந்நிய சக்திகள் தமிழினத் துரோகிகள் சிங்கள இனவாத சக்திகள் போன்ற பலரது தொடர்புகள் அம்பலத்துக்கு வந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. சிவராமின் வார்த்தைகள் தீர்க்கதரிசனமாகியிருக்கிறது.

'நான் கொல்லப்பட்டுவிட்டேன் என்றால், நான் தேசியத்திற்காகத்தான் ஆயுதம் ஏந்தினேன்... தேசியத்திற்காகத்தான் பேனா ஏந்தினேன்... தேசியத்திற்காகத்தான் சாவேன்" என்று சிவராம் சொன்னவர் என்று குறிப்பிட்டு கட்டுரை எழுது என்றார். நெஞ்சு கனக்கிறது.

இறுதிவரை அவரை ஒரு அடையாளத்துக்குள் வைத்து மதிப்பிடமுடியவில்லை என்னால். அவர் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் உலாவந்தபோதும் முரண்பாடான கருத்துக்களை எழுதிவந்த போதும் அவரிடமிருந்து மாறாத ஒன்று தொடர்ச்சியாக அவருடன் பயணித்துக்கொண்டேயிருந்தது. அது 'தேசியம்". இன்று தேசியத்தலைவரால் அவர் மாமனிதராக கௌரவிக்கப்பட்டிருப்பதுக்கும் ஒரே காரணம் அதுதான்;.

தனது சாவின்மூலம் தமிழ்பேசும் சமூகம் நேசிப்பதற்காய் சிவராம் விட்டுசென்றிருக்கும் ஒற்றைச்சொல்லும் அதுதான்.

0 comments: