இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் எதிர்காலம் என்பதை நாம் ஆராய்வதானால் அதற்கு இன்றியமையாத பல விடயங்கள் உள்ளன. ஆதில் தலையாயது இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தன் போரியல் மற்றும் பொருளாதார நலன்களை நிலைநாட்டவும் விரிவாக்கவும் அன்றும் இன்றும் எடுத்துவரும் முயற்சிகளேயாகும். இதற்கடுத்தபடியாக நாம் கருத்திற்கொள்ள வேண்டியது இந்தியாவின் மேற்படி முயற்சிகளுக்கு எதிராக அல்லது அதனை மட்டுப்படுத்திடும் வகையில் சீனாவும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளான ஜப்பான் பிரித்தானியா என்பனவும் அன்றும் இன்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைத்துவரும் வியூகங்களாகும். 1970 களின் பிற்கூற்றில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை விரிவாக்கிட அமெரிக்கா செய்த காய் நகர்த்தல்களில் ஸ்ரீலங்கா தொடர்புபட்டிருந்ததாலேயே இந்தியா தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதமும் பயிற்சியும், புகலிடமும் கொடுத்து அதன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசு மீது அழுத்தத்தை ஏற்படுத்தி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செய்து கொண்டது என்பது எமது விடுதலைப் போராட்டம் புறக்கணிக்க முடியாத உண்மை.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகமான எந்த சக்தியோ இலங்கையில் தனது படைகளை வைத்திருக்க முடியாது. திருமலைத் துறைமுகத்தையோ இலங்கையிலுள்ள வேறு தளங்களையோ பயன்படுத்த முடியாது என அந்த ஒப்பந்தம் ஸ்ரீலங்காவை எக்காலத்துக்கும் பிணித்துவிட்டது என்பது அடுத்த உண்மை. இலங்கை அமைதிப்பேச்சுகளின் செல்திசையை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் முற்றாக ஆக்கிரமிக்க முற்படுவதை மட்டுப்படுத்த இந்தியா எடுத்துவரும் மறைமுக முயற்சிகளின் விளைவாகவே இன்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கெடுபிடி ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் திரிசங்கு நிலையில் கிடக்கின்றன என்று சில சிங்கள ஆய்வாளர் கூறுவதும் நாம் இலகுவில் தட்டிக்கழித்திடமுடியாத அடுத்த விடயம்.
இலங்கையின் துறைமுகங்களையும், வான் படைத்தளங்களையும் தங்கு தடையின்றிப் பயன்படுத்திட வழிவகுக்கும் ACSA என்ற ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசுடன் கைச்சாத்திட அமெரிக்கா 2002 இல் தயாராக இருந்ததென்பதையும் அதை இந்தியா தலையிட்டுத் தடுத்துவிட்டதென்பதும் அடுத்த உண்மை.
இதுமட்டுமன்று தனித் தமிழீழ அரசு நிறுவப்படுகின்றது என வைத்துக்கொள்வோம். அதன் இருப்பிற்கு வங்காள விரிகுடா ஊடாகவும், மன்னார் வளைகுடாவினு}டாகவும் செல்லும் கடற்பாதைகள் இன்றியமையாத உயிர் நாளங்களாக அமையும். இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவின் கையிலிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கிடைப்பட்ட 10 பாகை கடலோடை வழியாகவே தென்கிழக்காசியா, சீனா, ஜப்பான் என்பவற்றை நோக்கிச் செல்கின்றன என்பதும், தமிழீழத்தின் மீது நேரடியாகப் பாதைகளை நசுக்கியும், கடற்தடைகளைப் போட்டும் அதன் இருப்பை கேள்விக்குறியாக்கவே இந்தியா முயன்றிடும் என்பதும் தமிழீழ விடுதலைப் பற்றாளர் அனைவரும் அலசிப்பார்க்க மறுத்திடமுடியாத விடயங்களாகும்.
தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கும் எம்மைச் சூழவுள்ள கடலுக்கும் உள்ள தொடர்பு அரசியல் ரீதியாகவும் போரியல் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட முடியாதது என்ற உண்மை இவ்வாறிருக்க போன கிழமை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா வகுத்துவரும் வியூகங்களின் சில முக்கியமான பின்னணிகளைப் பற்றி எழுதிய கருத்துக்கள் விளங்கவில்லை எனவும், வரலாறு கிரலாறு என ஏன் எழுதிக் கொண்டிருக்கின்றீர்களென்றும் ஒரு சிலர் கூறினர்.
“படம்பார். பாடம் படி. சூரியன் கிழக்கில் உதிக்கும்” என்ற பாணியில் எழுதினால்தான் படிப்போம். இல்லையெனில் எமது குண்டுச்சட்டி இருக்கவே இருக்கிறது. குதிரை விடுவதற்கு எனக் கூறுபவர்க்காக எமது வருங்காலம் பற்றிய எமது கேந்திரப் பாதுகாப்புப் பற்றிய தேடல்களைக் கைவிட்டு அரிவரிப் பாடம் நடத்திக் கொண்டிருக்க இத காலமல்ல.
இந்தியாவின் பாதுகாப்புப்பற்றிய அக்கறைகள் நடைமுறைகள் என்பன எங்ஙனம் அதன் பெருநிலப்பரப்பு மையப்பட்டதாக ஆரம்பத்திலிருந்து அமைந்திருந்தன என்பதையும், 1971 ஆம் ஆண்டு பங்காளதேஷ் போருக்குப் பின்னர் இந்தியாவின் பாதுகாப்பு வியூகங்கள் ஏன் எங்ஙனம் வங்காள விரிகுடா, அரபிக் கடல், இலங்கையைச் சுற்றிய கடற்பரப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் கண்டோம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய போரியல் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இலங்கை துணைபோகாமல் இருக்கவேண்டும் என்பதில் இந்தியா கொண்ட அக்கறையின் விளைவாக 1974 – 76 ஆகிய ஆண்டுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் அது இருகடல் எல்லை ஒப்பந்தங்களை செய்து கொண்டது.
இக்காலகட்டத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க – ஏகாதிபத்தியம் தளம் அமைத்து தனது கடலாதிக்கத்தை விரிவாக்க எடுத்த முயற்சியை சோவியத்யூனியன், இந்தியா ஆகியவற்றின் பக்கம் நின்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அப்போதைய அரசு எதிர்த்து வந்தது. இது இந்தியாவிற்குத் தனது தென்புலக் கடற் பாதுகாப்புப் பற்றிய திருப்தியை ஏற்படுத்திற்று.
ஸ்ரீலங்கா அரசின் அனுமதியின்றி அதன் கடற்பரப்பில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் பயணிக்க முடியாது என 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாத இலங்கைக் கடற் சட்டப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தமையும் இதற்கு வலுவூட்டியது.
ஆனால் இந்நிலை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி 1977 இல் ஆட்சிக்கு வந்த போது மாறிற்று. 1981ஆம் ஆண்டு அணி சேரா நாடுகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
ஆதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் டி.யூ.கோகார்சியாதீவில் அமைந்திருந்த அணு ஆயுதக் கடற்படைத்தளம் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற தீர்மானத்தை இந்தியா கொண்டுவர முனைந்தது. இத்தீர்மானத்தை மாற்றியமைத்திட ஸ்ரீலங்கா அரசு அங்கு கடும் முயற்சி எடுத்து அதில் டியூகோ கார்சியா பற்றி குறிப்பிடப்பட்டதை நீக்குவதில் வெற்றியும் கண்டது. அமெரிக்காவிற்குச் சார்பாகவே ஸ்ரீலங்காத அரசு இதைச் செய்தது என்ற விடயம் இந்தியாவிற்கு எரிச்சலை ஏற்படுத்திற்று. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் நிறுவப்படுவதையும், விரிவடைவதையும் ஜே.ஆர். அரசு விரும்புவதையே அதன் மேற்படி நடவடிக்கை காட்டுகிறது என இந்திய வெளிவிவகார மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உஷாரடைந்தனர்.
ஆதை மேலும் வலுப்படுத்தும் வகையில் அதே ஆண்டு ஸ்ரீலங்கா அரசு திருமலை எண்ணெய் குதங்களை கோஸ்டல் கோப்ரேஷன் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முடிவெடுத்தது. இந்நிறுவனத்தின் பின்னணி மிகச் சந்தேகத்திற்கிடமாகவுள்ளதாக இந்தியா ஸ்ரீலங்கா அரசிடம் கூறி இதைத் தடுத்துவிட்டது. இதன் பின்னர் டெல்லிக்கும் ஸ்ரீலங்காவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலிக்குமிடையில் நடந்த பேச்சுகளின் விளைவாக திருமலை எண்ணெய்க் குதங்களை சர்வதேச ஒப்பந்தக் கேள்வி அடிப்படையில் கொடுப்பதாக உடன்பாடு காணப்பட்டது.
இந்தியாவின் பாதுகாப்பு பற்றிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க இலங்கை எண்ணெய்க் கூட்டுத்தாபனம் 1982 ஏப்ரல் மாதம் வெளியிட்ட சர்வதேசக் கேள்விப் பத்திரத்தில் “எந்தவொரு இராணுவத்திற்கும் உரிய எரிபொருள் திருமலைக் குதங்களில் வைக்கப்படமாட்டாது” என்ற அறிவித்தலையும் வெளியிட்டது. இதனடிப்படையில் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் திருமலைக் குதங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான கேள்விப் பத்திரம் சமர்ப்பித்தது. வழங்கப்பட்ட அனைத்திலும் இதுவே இலாபகரமானதாக இருந்தபோதும் ஸ்ரீலங்கா அரசு அதைக்கிடப்பில் போட்டுவிட்டு சிங்கப்பூரில் அமெரிக்கப் பின்னணியுடன் இயங்குவதாகச் சந்தேகிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு திருமலைக்குதங்களை வழங்க ஏற்பாடு செய்யலாயிற்று. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அணுவாயுதத் தளத்தை ஆதரிக்கவும், திருமலையில் அமெரிக்கா மறைமுகமாகக் காலு}ன்ற உதவவும் ஸ்ரீலங்கா முயற்சி எடுத்தவேளையில்தான் இந்தியப்புலனாய்வுத்துறை இலங்கைத் தமிழ் இளைஞர் சிலருக்குப் பயிற்சி அளிக்க முனைந்தது. (1981-82 காலப்பகுதியில் அந்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி இராணுவப் பயிற்சி அல்ல). திருமலைத்துறை முகப்பகுதியை எங்ஙனம் வேவு பார்ப்பது. பல்வேறு வகைக்கப்பல்களை எப்படி அடையாளங் காண்பது என்பதாகவே அப்பயிற்சி அமைந்திருந்தது.
மேற்படி இளைஞர்களுக்கும் விடுதலை அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கவில்லை.
இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல் 1983 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி அமெரிக்காவின் குரல் (Voice of America) வானொலி நிலையத்தை புத்தளம் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலைப்பரப்பில் நிறுவி நடத்திட 20 ஆண்டுகளுக்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதன்படி ஒப்பந்தம் முடிந்தது அதையடுத்து வரும் ஒவ்வொரு 10 ஆண்டும் அது புதுப்பிக்கப்படலாம் எனவும் உடப்பாடானது.
இந்து சமுத்திரத்தினுள் திரியும் அமெரிக்க நீர்முழ்கிக்கப்பற்படையுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான அதிநுண்ணலைப் பிறப்பாக்கியையும் மேற்படி வானொலி நிலையம் கொண்டிருக்கிறது என இந்தியாவும் சோவியத் யூனியனும் குற்றஞ்சாட்டின. இந்த அதி நுண்ணலைத் தொலைத்தொடர்பு நிலையத்தை நிறுவுவதற்கான இடப்பரப்பு டியூகோ கார்சியாத் தீவில் இல்லையெனவும் அரபிக் கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள இரணவிலப்பகுதியே அதற்கு வசதி அமைந்திருக்கிறது எனவும் இந்திய போரியல் ஆய்வாளர் ஜஸ்ஜீத்சிங் அப்போது கருத்து வெளியிட்டார். இதுமட்டுமன்றி தன்மீதும் தனது நேசநாடுகள் மீது உளவியற்போரைத் தொடுக்கவே இந்த வானொலி நிலையத்தை மிகசக்தி வாய்ந்த தொன்றாக அமெரிக்கா நிறுவியுள்ளது என சோவியத் யூனியன் குற்றஞ்சாட்டிற்று. இந்த வேளையில் தான் ஸ்ரீலங்காவை நிரந்தரமாகத்தன் பிடிக்குள் கொண்டு வரவும் அதன் வெளிச்சுயநிர்ணய உரிமையைத் தனக்கேற்றவாறு கத்தரித்துவிடவும் இந்தியா தீர்மானித்தது. இக்குறிக்கோளை அடைந்திடுவதற்குரிய கருவியாக தமிழீழ விடுதலைப் போரை பயன்படுத்துவதற்கு அது ஆவன செய்யலாயிற்று.
11.01.2004 சிவராம்.
Thursday, November 1, 2007
இந்து சமுத்திர வல்லாதிக்க போட்டியில் தமிழீழம்
உங்கள் செல்லிடத் தொலைபேசியின் குருதிக்கறை
இலங்கையின் அமைதிப் பேச்சுவார்த்தைகளையொட்டி மேற்கில் இருந்து பல்வேறு அரச சார்பற்ற மற்றும் ஆய்வு நிறுவனங்கள் இங்கு வருகைதந்து செயல்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, சிவில் சமூகத்தைப் பலப்படுத்தல் போன்றவற்றைப் பற்றி எம்மிடையே காணப்படும் படித்தவர்கள், சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆகியோரிடையே கருத்தரங்குகளை இவை நடத்தி வருகின்றன. இவற்றினுடைய கருத்துக்களையும், அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளின் கூற்றுக்களையும் ஒரு சேரப் பார்க்கும்போது உன்னத மனித விழுமியங்களை எம்மிடையே வளர்த்தெடுப்பதையே மேற்படி நாடுகளும் மேலைத்தேய அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆய்வு மையங்களும் தமது தலையாய நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன என்ற எண்ணம் எம்மிடையே பலருக்கு தோன்றலாம்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற ஆங்கிலம் பேசும் சில ‘படித்த’ மனிதர்களும் இக்கருத்தை வேத மந்திரம் போல் ஓதுகின்றனர். எமது இளைஞர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும் வெள்ளைக்காரரிடம் நாம் படிக்க வேண்டிய உன்னத மனித விழுமியங்கள் பல உள்ளன எனவும் அவர்கள் ஓதுவார்கள். இது வெள்ளைக்காரருக்கு கைகட்டிச் சேவகம் செய்த காலனித்துவ அடிமைப் போக்கின் தொடர்ச்சியே.
தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துதல் என்ற போர்வையில் வெளித்தலையீடுகள் ஏற்படக்கூடிய ஆபத்து எம்மைச் சூழ்ந்து வருகிறது. இதற்கு முன்னேற்பாடாக சில உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நுட்பமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவை, எம்மிடையே சாத்தியமில்லை என்பது போலவும் இவை எமக்கு மேற்கில் இருந்து ஊட்டப்பட வேண்டியவை என்பதான ஒரு உளப்பாங்கையும் எம் மத்தியில் நுட்பமாக உருவாக்கும் நோக்கில் இந்த வேலைகள் படிப்படியாக தமிழர் தாயகத்தில் விரிவாக்கமடைந்து வருகின்றன.
ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தையும் நோக்கங்களையும் மறைப்பதற்கென பல புத்திஜீவிகள் தம்மை அறியாமலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். உலக மயமாதல் நவதாராளவாதம் போன்ற கருத்தியல்கள் ஏகாதிபத்தியத்தின் கோரப்பற்களுக்கு முலாம் பூசுகின்றன. இந்தியாவின் உண்மை நோக்கங்களை சரியாக உணர்ந்து கொள்ளாமல் ‘பாரதமாதா வாழ்க’ அன்னை இந்திராவே வருக என அரசியல் பேதைகளாக அன்று தமிழர் கோஷமிட்டதன் விளைவு என்னாயிற்று என்பதை நீங்கள் அறிவீர்கள். நீண்டகாலமாக இந்தியாபற்றி எமது புத்திஜீவிகளிடையே நிலவிவந்த ‘புனிதமான’ கருத்துக்களின் காரணமாகவே அந்நாட்டின் நோக்கங்கள் எம்மைப் பொறுத்தவரையில் எவ்வாறிருந்தன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போயிற்று. அதாவது எமது போராட்டத்தைச் சுற்றி இந்தியாவின் கரங்கள் இறுகி வந்த வேளையில் அதைச் சரியாகவும் அறிவுபூர்வமாகவும் தகுந்த ஆதாரங்களோடும் புரிந்து கொண்டு மாற்று அரசியல் நடவடிக்கையை எடுப்பதற்குத் தேவையான ஒரு அறிவியல் எம்மிடையே அன்று இருக்கவில்லை. இந்தியாவின் இன்னொரு முகம் பற்றிய அறிவூட்டல் எமது மக்களிடையே காலாகாலத்துக்கு செய்யப்பட்டிருந்தால் நாம் சந்தித்த பேரழிவுகளை சற்றேனும் குறைத்திருக்கலாம் என நான் எண்ணுகின்றேன்.
இன்று எமது உரிமைப் போராட்டத்தைச் சுற்றி ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்கள் சூழ்ந்து வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் காணப்படாத எத்தனையோ மேலைத்தேய நிறுவனங்கள் எம்மிடையே தோன்றி கிளை பரப்பி வருகின்றன. இவற்றினுடைய ஒட்டுமொத்த செயற்பாடுகள் கவனமாக ஆராய்வோமேயானால் ஒரு உண்மை புலப்படும். இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் உண்மை நோக்கங்களை பூசி மெழுகி எம்மிடையே, எமது மக்களிடையே அமெரிக்கா பற்றியும் அதன் கூட்டு நாடுகள் பற்றியும் ஒரு நல்லெண்ண மாயையை ஏற்படுத்தி வருகின்றன என்பதே அது.
அமெரிக்கா படைத்துறை ஊடுருவலுக்கு ஏதுவான முறையில் சமூகங்களை நெகிழ்வுபடுத்தி அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். (இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்)
எமது மக்களிடையே மேற்குலகைப் பற்றி நிலவிவரும் பல மாயைகள் தகர்த்தெறியப்படவேண்டும். உலக ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை மறைத்திருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட்டு உண்மைகளை எமது மக்கள் கண்டிட ஆவன செய்யப்படவேண்டும். இல்லையெனில் நாம் இந்தியா விடயத்தில் விட்ட தவறை மீண்டும் அமெரிக்கா விடயத்தில் விட நிரம்ப வாய்ப்புண்டு.
அமெரிக்காவிலும் அதன் நேச நாடுகளிலும் காணப்படும் ஜனநாயகம். நல்லாட்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற எமது புத்திஜீவிகளால் போற்றப்படுகின்ற பல விடயங்கள் கொள்ளையும், கொலையும் இன்றிச் சாத்தியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் உண்மைச் சொந்தக்காரர்கள் ஆகிய செவ்விந்தியர்களிடம் இருந்து கொள்ளையின் மூலமாகவும், ஏமாற்றினு}டாகவும் வெள்ளையர்களால் பறிக்கப்பட்ட வளங்களிலும் நிலங்களிலும் தான் இன்று நீங்கள் வியந்து நோக்கிடும் நாகரிகங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பது யாவரும் அறிந்த பழைய கதை.
மூலவளங்கள் நிறைந்த பல்வேறு நாடுகளைச் சீரழித்து அவற்றை பகற்கொள்ளையடித்தே மேற்கின் ஜனநாயகமும் நல்லாட்சியும் இன்னு நடைபெறுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றபடி அந்தந்த பொருட்களை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுவதில் மேலைத்தேய நாடுகள் மிகக் கவனமாகச் செயற்படுகின்றன. இந்த விடயத்தில் ஜனநாயகத்தையும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் காலில் போட்டு மிதித்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டு நாடுகளும் கொள்ளை இலாபம் அடிக்கின்றன.
இன்று நம்மிடையே சுடச்சுட விற்கும் பொருள் எது? அது சந்தேகத்திற்கிடமின்றி செல்லிடத் தொலைபேசியே ஆகும். மேற்கு நாடுகளில் இன்று பெரும் இலாபமீட்டும் துறையாக செல்லிடத் தொலைபேசி உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இதற்காக மூன்றாம் உலக நாடு ஒன்றில் 1999 இற்கும் 2002 இற்கும் இடையில் ஏறத்தாழ 40 இலட்சம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?
செல்லிடத் தொலைபேசி உற்பத்தி செய்வதற்கு இன்றியமையாத மூலப்பொருள் கோல்ற்ரான் (Coltan) என்ற கனிமப் பொருளாகும். இது பெருவாரியாக ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசில் காணப்படுகிறது.
Coltan என்பது Colombium – Tantalum என்பதன் சுருக்கமாகும். இந்த கனிமப் பொருள் 19 ஆம் நுற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாயினும் செல்லிடத் தொலைபேசி உற்பத்தியின் திடீர் வளர்ச்சிக்குப் பின்பே இதற்கு கடும் கேள்வி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இந்த கனிமப் பொருள் செல்லிடத் தொலைபேசி உற்பத்தியின் வளர்ச்சியின் காரணமாக ஒரு கட்டத்தில் கிலோ 600 அமெரிக்க டொலர்களுக்கு உலகச் சந்தையில் விலை போயிற்று.
உலகின் அறியப்பட்ட Coltan வளங்களில் எண்பது சதவீதமானவை கொங்கோவிலேயே காணப்படுகின்றன. 1990 இற்கும் 1999 இற்கும் இடையில் Coltan இற்கான உலக கேள்வி 300 சதவீதத்தால் அதிகரித்தது.
1996 ஆம் ஆண்டு கொங்கோவில் லோறன்ட் கபீலாவின் தலைமையின் கீழ் கிளர்ச்சிப் படைகள் அப்போது அங்கிருந்த அரசுக்கு எதிராக வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது ஏகாதிபத்திய ஆதரவுடன் இயங்குகின்ற பல பல்தேசிய நிறுவனங்கள் அவரோடு Coltan அகழ்வு சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை செய்து கொண்டன. உள்நாட்டுப் போர் காரணமாக காணப்பட்ட குழப்பத்தின் மத்தியில் Coltan ஐ மிக மிக மலிவாகவும் பல சந்தர்ப்பங்களில் இலவசமாகவும் அபகரித்துச் செல்ல பல்தேசிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் கிளர்ச்சியாளர்களோடு பல்வேறு வகையில் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு COLTAN ஐ கொள்ளையடித்துச் செல்வதில் குறியாக இருந்தன.
உதாரணமாக, அமெரிக்காவின் இரு முக்கிய கனிம உற்பத்தி நிறுவனங்களான American Mineral Felds, Bechtel Corporation ஆகியன கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க செய்மதிப் படங்களை வழங்கி அவர்களுடைய போர் மூலோபாயத்திற்கு உதவின. அதற்கு கைமாறாக COLTAN ஐ அபகரிப்பதற்கான உடன்பாடுகளைச் செய்து கொண்டன. ஆனால், காலப்போக்கில் தான் விடுவித்த பகுதிகளுடைய இறைமையை நிலை நாட்ட கபிலா முயன்றபோது அவருக்கு எதிராக மேற்படி பல்தேசிய நிறுவனங்கள் பல கூலிப்படைகளை உருவாக்கி துண்டிவிடலாயின. இதன்காரணமாக COLTAN விளைகின்ற பகுதிகளில் பயங்கரமான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. விடுவிக்கப்பட்ட கொங்கோவில் இறைமையை கபிலா நிறுவ முனைந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். கொங்கோ தனி இறைமையுள்ள ஒரு நாடாக விடுதலையடைந்தால் COLTANஐ கொள்ளையடிக்க முடியாது என்பதை உணர்ந்தே அமெரிக்க பல்தேசிய நிறுவனங்கள் அங்கு மிகப் பயங்கரமானதொரு நிலைமையைத் தோற்றுவித்தன. அந்த கனிமப் பொருளின் உண்மையான பெறுமதியைத் தீர்மானிப்பதற்கோ அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தை கொங்கோ நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக செலவிடுவதற்கோ அங்கு இன்று எந்த தலைமையும் கிடையாது. இதை தட்டிக் கேட்கக் கூடிய புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் நாளாந்தம் அங்கு கொன்றொழிக்கப்படுகிறார்கள். இவ்வாறு COLTAN ஐ கொள்ளையிடுவதற்காக அமெரிக்க பல்தேசிய நிறுவனங்களால் து}ண்டி விடப்பட்டிருக்கும் கைக்கூலிப் படைகளின் கொலை வெறியாட்டத்தின் காரணமாக மாதாந்தம் 73 ஆயிரம் மக்களாவது படுகொலை செய்யப்படுகிறர்கள் என ஒரு ஆய்வாளர் கூறுகிறார். (STOLEN GOODS: COLTAN AND COFILICTIN THE DEMOCRATIC REPUBLIC OF CONGODENA MONTAGUE, SAIS REVIEW VOI.XXII NO:1,2002 என்பதை இணையத்தில் தேடினால் இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்)
இன்று சூடானில் டார்புர் மாநிலத்தில் மக்கள் அகதிகளாக்கப்படுவதாகவும் அவர்களை சூடானிய அரசு கொடுமைப்படுத்துவதாகவும், ஆகவே அங்கு தமது படைகளை அனுப்பி அந்த மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி வருகின்றன. ஏன் இதே மனிதாபிமானம் கொங்கோ மீது காட்டப்படவில்லை? ஏனெனில் அங்கு தங்கு தடையின்றி கொள்ளை நடக்கின்றது. ஆனால், சூடானில் கொள்ளையடிப்பதற்கு வழி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் டார்புர் மக்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. அமெரிக்கா. ஜனநாயகத்தைப் பற்றியும் நீதி நியாயத்தைப் பற்றியும் கதைப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? எமக்கு பலம் இருந்தால் மட்டுமே எமது இறைமை பாதுகாக்கப்பட முடியும். இல்லையெனில், ஏகாதிபத்தியத்தின் துணையோடு எமது சமூகமும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சின்னாபின்னப்படுத்தப்பட்டு விடும் என்பதை அனைவரும மனதில் கொள்ளவேண்டும்.
29.09.2004 சிவராம்.
ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்
இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தொட்டாலே மகா பாவம் என சிங்கள தேசத்தில் நாளாந்தம் புதுப்புது பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பல சிங்கள மேலாண்மைக் கருத்தியலாளர்கள் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை வரைவை படிக்காமலேயே அது கிழித்தெறியப்படவேண்டுமென காரசாரமாக எழுதி வருகின்றனர்.
புலிகள் கேட்பது போல இந்த வரைபின் அடிப்படையில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக தமது மாற்று வரைபொன்றைப் பற்றியும் சமாந்தரமாகப் பேசலாம் என சந்திரிகா அரசு கூறிவருகிறது. ஆனால், சிங்கள தேசத்தில் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிக் கிளப்பப்பட்டு வரும் அனைத்துப் பூச்சாண்டிகளும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கும் போது தாமாகவே மறைந்துவிடும் என்பதே உண்மை. எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதைவிட சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெல்வது, எப்படி வியூகம் வகுப்பது என்பன பற்றிய கவலைகளும் அக்கறைகளுமே மேலோங்கியுள்ளன. இது விடயத்தில் நாம் அனைவரும் தெளிவாயிருக்கவேண்டும். அதைவிடுத்து நேரத்துக்கு நேரம் வெளியாகும் சந்திரிகா அரசின் அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பசப்பு வார்த்தைகளையும் கண்டு மயங்கி மீண்டும் இலவு காத்த மடக் கிளிகளாவதை நாம் தவிர்க்க வேண்டும். புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் தாம் பேசத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறத் தலைப்பட்டுள்ளமையும் ஒரு நயவஞ்சக நாடகமே. ஏன்? ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி வெல்லக்கூடிய வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தற்போது இல்லை.
ஹெல உறுமய, ஜே.வி.பி. எப்படியான நிலைப்பாடு எடுத்தாலும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள தேசத்தின் வாக்கு பிரிவது தவிர்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் துரிதமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு சந்திரிகா அரசு மீது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திவரும் வெறுப்பாகும்.
இதேவேளை சந்திரிகா – ஜே.வி.பி. அரசின் மீது உள்ள வெறுப்பால் தன்பக்கம் திரும்பக்கூடிய சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே தற்போது இரு பெரும் சிங்களக் கட்சிகளும் ‘பிரேமதாசா சூத்திரத்தின்’ மீது நாட்டம் கொள்கின்றன. 1988 ஆம் ஆண்டிலே அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி.யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமாக சிங்கள மக்களிடையே பெரும் அரசியல் கிளர்ச்சியொன்றைக் கிளப்பிக் கொண்டிருந்தன.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சிங்கள தேசத்தை ஐக்கிய தேசியக்கட்சி இந்தியாவிற்கு விற்றுவிட்டது என அவர்கள் பரப்புரை செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுக்கு ஜே.வி.பி. தடைவிதித்தது. அவற்றை மீறி விற்ற ஒரு சில வர்த்தகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இப்படியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாபெரும் வெறுப்பலையொன்று வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமதாசா அதன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிரிந்த சிங்கள வாக்கின் ஒரு பகுதியோடு பிரிபடாத வடக்குக் கிழக்கு தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் இணைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குத் தேவையான மொத்த வாக்கின் 50 சதவீதத்துக்கு மேல் பெறலாம் என்பது அப்போது பிரேமதாசா போட்ட கணக்கு. இதையே ஸ்ரீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கான பிரேமதாசா சூத்திரம் என அந்நேரத்தில் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அழைத்தனர்.
சிங்கள தேசத்தில் எப்படியான எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் அடிப்படையில் மாறா வாக்கு வங்கியொன்று இருக்கின்றது. மொத்த வாக்காளர் தொகையில் இது 30 -35 சதவீதம் எனக் கருதப்படுகிறது. இதோடு பிளவுபடாத தமிழர் தாயக மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள தேசத்தில் ஏற்படக்கூடிய தனக்கெதிரான எந்த அலையையும் மேவி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லலாம் என பிரேமதாசா சூத்திரம் கூறுகிறது.
1988 ஆம் ஆண்டிலே சிங்கள தேசத்தில் வீசிக்கொண்டிருந்த இந்திய வெறுப்பலைக்கு மத்தியில் பிரேமதாசாவும் அவருடைய அரசியல் மதியுரைஞர்களும் இரகசியமாக இந்தியத் து}தரகத்தை அணுகினர். வடக்குக் கிழக்கின் பிரிபடாத தமிழ் வாக்கு மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசாவுக்கு விழுவதற்கு அப்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம் ஆவன செய்யவேண்டுமென அன்றைய இந்தியத் து}துவர் ஜே.என். தீட்சித்திற்கு சில து}துகள் அனுப்பப்பட்டன. வடக்குக் கிழக்கில் விழப்போகும் வாக்குகள் பிரேமதாசாவுக்கு வெற்றியை நிச்சயம் பெற்றுக்கொடுக்குமெனவும் இதன் காரணமாக ‘அவர் இந்தியாவிற்கு என்றும் நன்றியுடையவராக இருப்பார்’ (“He would be eternally grateful to India”) எனவும் அன்றைய இந்தியத் து}துவர் ஜே.என். தீட்சித் ஒரு முறை 1988 ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார். அவர் கூறியது போலவே அந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவுக்கு வடக்கு கிழக்கில் அமோசமான வாக்குகள் கிடைத்தன.
இந்தியப் படைகள் பெட்டி பெட்டியாகத் திணித்த இந்த வாக்குகளே அவருடைய வெற்றியைத் தீர்மானித்தன. இது முடிந்த கையோடு கொழும்பில் நான் தற்செயலாக வரதராஜப்பெருமாளைச் சந்திக்க நேர்ந்த போது அவரும் பிரேமதாசாவைப் பற்றி தீட்சித் சொன்ன அதே வசனத்தைச் சொன்னார். தேர்தலில் வெற்றிபெற உதவியதற்குக் கைமாற்றாக பிரேமதாசா மாகாணசபை திறம்பட இயங்க தனக்கு ஆவன செய்வார் என வரதாராஜப்பெருமாள் சொன்னார்.
இதையொட்டித்தான் அந்த நேரத்தில் ‘நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா’ (“Premadasa is a go getter”) என அவருக்கு பெருமாள் புகழாரம் சூட்டினார். தனது நன்றிக்கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர் ‘சாதனை’ படைத்தார். ஆனால் நடந்ததென்ன? தனது மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம் செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்பதைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி’ கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ?’ என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டுமொருமுறை அரங்கேற்றியது.
அந்தப் பிரேமதாசா சூத்திரத்தை மீண்டும் து}சுதட்டி கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தோன்றியுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இலங்கையின் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேலான தொகையை ஒரு வேட்பாளர் பெறவேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கென்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஜே.வி.பி. கூட்டு பெற்ற மொத்த வாக்கு 4,223,970 அதாவது 45.60 சதவீதம். ஐக்கிய தேசியக் கட்சி 3,504,200 அதாவது 37.83 சதவீதம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா வெல்வதென்றால் மேலும் 12.17 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும். விலைவாசி ஏற்றத்தால் சந்திரிகா அரசு மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக சராசரி 5 – 6 சதவீதமான வாக்கு ஐக்கியதேசியக் கட்சியின் பக்கம் தற்போது சாய்ந்துள்ளது எனக் கொண்டாலும் இன்னும் 6 -7 சதவீத வாக்குகளை தேட வேண்டிய கட்டாயம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டு. 2004 ஏப்ரல் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்கு 633,654 அதாவது 6.84 சதவீதம்.
இது பிரிபடாத மொத்த வாக்காக இருக்கிறது. இதைக் கபளீகரம் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது கடினம் என ஐக்கிய தேசியக் கட்சி கவலை கொள்கிறது. ஆகவே அது புலிகளை வசப்படுத்தும் நோக்கத்தில் பல வேலைகளைச் செய்யவும் ஆசைவார்த்தை பேசவும் இப்போதே தொடங்கிவிட்டது. ஏதோ ஒரு வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழக் கூட்டமைப்பின் வாக்கு தனக்கே கிடைக்குமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கணக்குப் பண்ணுகிறது. இவையெல்லாம் இறுதியில் ஆற்றைக்கடந்த கதையாகத்தான் இருக்குமென்பதில் யாரும எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
31.10.2004 சிவராம்.
ஒஸ்லோ பிரகடனம் ஒரு பொறி; அது கிழித்தெறியப்படவேண்டும்
வட கிழக்குத் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கான தீர்வு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலேயே காணப்படவேண்டும். அதற்கமையவே புலிகள் தமது தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மிக ஆணித்தரமாகக் கூறிவருகின்றன.
சிறிலங்காப் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் அந்நாட்டின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் றிச்சேட் ஆர்மிரேஜ் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெட்டத்தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரைக் காணப்புறப்படுவதற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள சர்வதேசக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் உரையாற்றியபோது கிறிஸ் பற்றனும் ஒஸ்லோப் பிரகடனத்தின்படியே புலிகள் இனச்சிக்கலுக்கான தீர்வு பற்றியது தமது முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் எனக்கூறியது மட்டுமன்றி, ஒரு படி மேற்சென்று அவர்கள் தயாரித்திருக்கும் சமஷ்டித் தீர்வு பிரிந்து செல்லும் உரிமை எனும சற்றே திறந்த கதவிடுக்கினுள் காலை வைத்துக்கொண்டு முன்வைக்கப்படுவதாக இருக்கக்கூடாது என மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.
அதாவது ஒஸ்லோப் பிரகடனத்தினடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கு ஒரு சமஷ்டித் தீர்வை புலிகள் முன்வைப்பதாயின் அதனுள் எமது சுயநிர்ண உரிமை பற்றிய பேச்சுக்கு இடமேயில்லை என்பதே கிறிஸ் பற்றனுடைய கூற்றின் சாராம்சம். அமெரிக்க பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆர்மிரேஜ் இதை வேறு விதமாக வலியுறுத்தியிருந்தார்.
புலிகள் மிகக் கவனமாக ஆராய்ந்து தயாரித்துச் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிய வரைவு ஒஸ்லோப் பிரகடனத்தின் வரையறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அது ஏற்கக் கூடியதல்ல என்பதே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடு என்பதை கிடைக்கும் சந்தர்ப்பங்களின் போதெல்லாம் அவை இப்போது வலியுறுத்தி வருகின்றன.
(புலிகளை இனிப்போருக்குப் போகாமல் பார்த்துக்கொண்டால் அவர்கள் தீர்வைப்பற்றிப் பேசிப் பேசிக் களைத்துபோய், காலவோட்டத்தில் ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சியினுள் வாழப்பழகிவிடுவார்கள் என்பது டெல்லியில் நிலவும் எண்ணம் போல் தெரிகிறது. இது பற்றிப் பின்னர் பார்ப்போம்)
இலங்கையின் ஒருமைப்பாட்டினுள் (Unity) உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் சிக்கலுக்கு தகுந்த சமஷ்டித் தீர்வொன்றினைத் தேடுவதென 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஒஸ்லோவில் ஸ்ரீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் பிரகடனம் செய்தனர்.
இப்பிரகடனமே இனித் தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற எந்தவொரு அரசியல் தீர்வுத்த்திட்டத்தினதும் பேச்சுவார்த்தைகளினதும் கோட்பாட்டு அடிச்சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.
இந்த வகையில் ஒஸ்லோ பிரகடனம் என்பது எமது நியாயமான போராட்டத்தை முடக்கவும், எமது மக்களின் உண்மையான அரசியற் பாரம்பரியத்தை தமது நோக்கங்களுக்குச் சாதகமான ஒரு பொய்மைத்தளத்திற்கு மாற்றவும் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஒரு பொறி என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது ஸ்ரீலங்கா அரசு தனது அரசியல் யாப்பை மாற்றி தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்காமல் அல்லது நாம் முன் வைப்பதை ஏற்றுக்கொள்ளாமல் பேசிப் பேசியே எமது இன்னொரு தலைமுறையை வீணடித்துக் கொண்டு போனாலும் நாம் எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதற்கான எந்த நடைமுறையிலும் இறங்காமல் நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பதே அந்நாடுகளின் நோக்கமாகும்.
புpரித்தானியா இலங்கைத் தீவை விட்டுச் சென்ற பின்னர் நாம் தேடிய அரசியல் முதுசத்தை கைவிடப்பண்ணும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பொறியே ஒஸ்லோ பிரகடனமாகும். 1972 இல் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் யாப்பை நாம் நிராகரித்தமையும், 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் 1977 இல் எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிட எமது மக்கள் ஜனநாயக hPதியாக வழங்கிய ஆணையும், அதைக் கோட்பாட்டடிப்படையில் மீளுறுதி செய்த திம்புப் பிரகடனமுமே எமது கைவிடப்படமுடியாத அரசியல் முதுசமாகும்.
எம்மை இவ் அரசியல் முதுசத்தைக் கைவிடச் செய்து ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சிச் சகதிக்குள் மாட்டவைப்பதற்கு 1987 இல் இந்திய - ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட முயற்சியை தோற்கடித்த நாம் ஒஸ்லோ பிரகடனம் என்ற பொறிக்குள் எப்படிச் சிக்குண்டோம்?
எமது போராட்டத்தைச் சுற்றி வலைவிரிக்கும் சர்வதேசச் சக்திகளையும் அவற்றினுடைய கேந்திர உள்நோக்கங்களையும் உலகில் நடைபெற்ற வேறு விடுதலைப் போராட்டங்களின் இதுபோன்ற அனுபவங்களையும் கவனமாகக் கற்று அலசி ஆராய்ந்து நாம் செயற்படவேண்டிய அவசியத்தையே இது காட்டுகிறது. இது எமது மக்களின் பிரச்சினை.
தமது உரிமைப் போராட்டங்களின் அரசியல் முதுசங்களைக் கைவிட்டவர்கள் இவ்வாறான பொறிகளுக்குள் சிக்கி தமது மக்களை படுகுழிக்குள் வீழ்த்திய கதைகள் பல உண்டு.
1964 ஆம் ஆண்டின் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் அனைத்துமாக இணைந்து பாலஸ்தீன விடுதலையின் அடிப்படைக்கோட்பாடுகளை ஒரு பிரகடனமாக்கின. இது Palestinian Charter என அறியப்படுகின்றது. பாலஸ்தீன மக்களின் பாரம்பரியத் தாயகத்திலிருந்து அவர்களை அகதிகளாக விரட்டியடித்துவிட்டு அங்கு சட்டவிரோதமாக இஸ்ரேல் நிறுவப்பட்ட அடிப்படை உண்மையின் தளத்தில் பாலஸ்தீனச் சாட்டர் பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ரேலின் படைபலம் அமெரிக்க உதவியுடன் பல்கிப்பெருகியபோதும் பாலஸ்தீனச் சாட்டரின் மேற்படி அடிப்படை அரசியல் மற்றும் சட்டாPதியாக அந்நாட்டிற்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.
1990 களில் நோர்வேயின் அனுசரணையோடு பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேலிய அரசுக்குமிடையில் நடைபெற்ற முன்னோட்டத் திரைமறைவுப் பேச்சுக்களின்போது யாசீர் அரபாத்தின் சில முக்கிய ஆலோசகர்கள் ‘வளைத்துப்’ போடப்பட்டனர். இஸ்ரேலுக்குச் சார்பாகப் பேச்சுக்களின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க மற்றும் நோர்வே ஜிய சக்திகளின் வேலைப்பாடுகளால் மேற்படி மதியுரைஞர்கள் அரபாத்தையும் திசைமாற்றினர்.
அவர்கள் அதை செய்வதற்கு எந்தத் தடங்கலும் இருக்கவில்லை- ஏனெனில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஊழலில் ஊறிய ஒரு அரசியற் சந்தர்ப்பவாதி. இப்படியான ஆலோசனைகளின் விளைவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை தமக்குச் சாதகமாகப் பின்தள்ளும் விடயத்தில் ஒரு பெரும் வெற்றியை ஈட்டின. 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இஸ்ரேல் அரசம் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் வைத்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டன.
இதுவும் ஒஸ்லோப் பிரகடனம் என்றே அறியப்படுகிறது. இப்பிரகடனத்தில் பாலஸ்தீன மக்களின் முழுச்சுயநிர்ணய உரிமை, அவர்களது பாரம்பரியத் தாயக உரிமை, பாலஸ்தீனத் தனியாட்சி ஆகிய அடிப்படைகள் என்பன குறிப்பிடப்படவில்லை.
அரபாத்தினுடைய ஆலோசகர்களையும் அவர்களுடாக அவரையும் வளைத்துப் போட்டதால் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கிடைத்தவெற்றியே அந்த ஒஸ்லோப் பிரகடனமாகும்.
நீண்டகாலமாகப் பொருட்செலவு மிகுந்த போரினால் சாதிக்க முடியாமற் போனதை ஒஸ்லோப் பிரகடனத்தின் ஊடாக இஸ்ரேல் சாதித்தது எனக் கூறின் மிகையாகாது. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை அரசியல் ஆவணமான பாலஸ்தீன சாட்டர் கைவிடப்பட்டது.
இங்ஙனம் அரபாத்தும் அவருடைய ஆலோசகர்களும் ஒஸ்லோப் பிரகடன விடயத்தில் சோரம் போனதை கடுமையாகக் கண்டித்து எழுதிய போராசிரியர் எட்வேர்ட் சயீட் போன்றவர்கள் சமாதானத்தின் விரோதிகளாக காட்டப்பட்டனர்.
பாலஸ்தீனத் தரப்பு நியாயங்களையும் தரவுகளையும் ஆழமாக ஆராய்ந்து, சேகரித்து அவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேலின் சூழ்ச்சிகளை முறியடிப்பதில் அரபாத்தினுடைய ஆலோசகர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை என பேராசிரியர் எட்வர்ட் சயீட் கூறுகிறார்.
பாலஸ்தீன சாட்டரின் அடிப்படைக் கோட்பாடுகளை அரபாத்தின் ஆலோசகர்கள் கைவிட்டதன் காரணமாக இன்று பாலஸ்தீன மக்களின் போராட்டம் திசை தடுமாறுகிறது. இவ்வகையான ஒரு தந்திரோபாயத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய அரசு வட அயர்லாந்துப் போராட்டத்தை அரசியல் hPதியாக மடக்கிப்போட முனைந்தது.
வட அயர்லாந்தின் பிரச்சினை அங்கு வாழும் கத்தோலிக்கருக்கும் புரட்டஸ்தாந்திகளுக்குமிடையிலான முரண்பாட்டைத் தணிக்கும் அதிகாரப் பரவலாக்கல், வன்முனையை அனைவரும் முற்றாகக் கைவிடல் போன்றவற்றின் அடிப்படையில் வரையறை செய்யப்படவேண்டும் என்பது பிரித்தானியாவின் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே 1996 இலிருந்து வடஅயர்லாந்து சமாதானப் பேச்சுக்களை அது முன்னெடுக்க விரும்பியது.
இதன் உள்நோக்கத்தை தெளிவாக இனங்கண்டு கொண்ட ஜரிஷ் விடுதலை இயக்கம் தனது போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மிகத்தெளிவாகப் பிரகடனப் படுத்தியது. வடஅயர்லாந்தை பிரித்தானியா ஆக்கிரமித்திருப்பதே பிரச்சினையின் அடிப்படை என்பதை ஐரிஷ் விடுதலை இயக்கம் கைவிடவில்லை. அதை கைவிடப்பண்ணுவதற்கு பிரித்தானியா எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன.
இவற்றையெல்லாம் இங்கு கூறுகையில் ஒரு ஆட்சேபணை எழலாம். மேற்படி உதாரணங்கள் எதுவும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சி;னையுடன் ஒப்பிடக்கூடியவையல்ல- ஏனெனில் இங்கு புலிகளிடம் பெரும் படைவலு இருக்கிறது என்பதே அது.
ஒரு மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் அவர்களிடமுள்ள படைவலு என்பது அவர்களுடைய முழு இறைமை என்ற அரசியல் குறிக்கோளை அடையும் ஒரு கருவியாகவே தொழிற்படுகிறது.
எனவே முழுச்சுயநிர்ணய உரிமை என்ற எமது அரசியல் முதுசத்தை நாம் கை கழுவிவிட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற ஒஸ்லோ பிரகடனத்தின்பாற்பட்டு ஒழுகுவதாயின் அக்குறிக்கோளை அடைந்திட புலிகளின் படைவலு தேவையற்றது என்ற எண்ணம் மக்களின் உள்ளத்தில் உண்டாகலாம். அறுகம் புல்லைத்தான் வெட்டப்போகிறோம் என்று முடிவெடுத்த பின் கோடாலி எதற்கு என்ற எண்ணத்தை காலப்போக்கில் எமது மக்களிடம் தோற்றுவிக்கலாம் என ஒஸ்லோப் பிரகடனத்தின் சூத்திரதாரிகள் கருதுகின்றனர்.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவின் முன்னுரையில் புலிகள் ஒஸ்லோப் பிரகடனத்தை து}க்கி ஒருபுறம் வைத்துவிட்டு எமது போராட்டத்தின் சரியான அரசியல் அடித்தளத்தை தெளிவாக இனங்காட்ட முற்பட்டுள்ளனர். ஒஸ்லோப் பிரகடனத்தைக் கிழித்தெறிந்து அதை ஒரு கெட்ட கனவாய் மறந்து அடுத்த கட்டத்தில் நாம் காலடியெடுத்து வைக்கவேண்டும்.
07.12.2003 சிவராம்

