Thursday, October 4, 2007

‘ஆர்ச்’ பிரச்சினையில் இருந்து பெற்ற அனுபவம்

இந்தோனேசியாவின் ‘ஆர்ச்’ மானிலப் பிரச்சினையும், அதனைத் தீர்த்துவைப்பதற்காக அண்மையில் நடைபெற்ற சமாதான முயற்சிகளும், தமிழ் மக்களின் பிரச்சினையை ஒத்ததாகவே இருக்கின்றது.
வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில், எதுவுமே நிட்சயமில்லாத இந்தக் காலகட்டத்தில், ‘ஆர்ச்’ பிரச்;சினை தொடர்பாக வெளிப்படையாகத் தெரிகின்ற சில விடயங்களை நாம் நிச்சயம் கவனத்தில் எடுத்தேயாகவேண்டி உள்ளது.
இந்தோனேசியப் பிரச்சினையை டோக்கியோவில் வைத்து சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்த்து வைப்பதற்கு ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் கடந்த வாரம் தோல்வியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, ‘ஆர்ச்’ விடுதலைப் போராளிகளை ஒழித்துக்கட்டுவதற்காக இந்தோனேசிய இராணுவம் ஆயிரக்கணக்கான தனது படையினரைப் ‘பரசூட்டுக்கள்’ மூலம் ‘ஆர்ச்’ மாநிலத்தில் தரையிறக்கினர்.
டோக்கியோ சமாதான மாநாடு தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்று பலரும், சண்டையை நிறுத்தும்படி இரண்டு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இப்படியான சமாதானத்திற்கான கோரிக்கைகள் சமாதானத்திற்கான கோரிக்கைகள் பலதரப்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கும் போதிலும், இந்தோனேசிய இராணுவத் தளபதி ஜெனரல் எந்ரியார்தனோ சுடார்டோ, போராளிகளை அழித்தொழிக்கும் படி தனது இராணுவத்தினருக்குக் கட்டளையிட்டிருந்தார். இப்படி சமாதானத்திற்கான அழைப்பை விடுத்திருந்த பெரிய சக்திகளோ, உண்மையிலேயே இந்தோனேசிய இராணுவத்தினது திட்டங்களைப் பூரணமாக அறிந்திருந்த அதேவேளை, மிகவும் துரித கதியில் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் இவற்றில் சில சக்திகள் ஆவல் கொண்டிருந்தன.
ஆர்ச் மாநிலத்தில் காணப்படுகின்ற வளங்களில் இருந்து கிடைக்கும் நன்மைகளை, இந்தோனேசிய மத்திய அரசு, ‘ஆர்ச்’ மாநிலத்துடனும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பதும், விடுதலைப் போராளிகளது ஒரு முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டிருந்தது. ‘ஆர்ச்’ பிரதேசங்களில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்படவில்லை. முன்னைய இராணுவ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இப்பிரதேச வாழ் மக்கள் மிகவும் வறுமையான நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றார்கள்.
தேசிய வருமானம் அனைத்தும் மத்திய அரசாங்கத்தினாலேயே கையாளப்பட்டு வருவதால், தங்களது தாயகப் பிரதேசங்கள் அபிவிருத்தி அடையாமல் இருப்பதுடன், தமது தாயகப் பூமியில் இருந்து கிடைக்கும் வளங்கள் கூட மத்திய அரசாங்கத்தின் சுரண்டல்களுக்கு உள்ளாகி விடுவதாக, ‘ஆர்ச்’ கெரில்லாக்கள் தெரிவிக்கின்றார்கள்.
‘ஆர்ச்’ மாநிலமானது, மிகுந்த வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம் என்பதுடன், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைவிடமாகவும் அது உள்ளது. உலகின் பெரும்பாலான வர்த்தகப் போக்குவரத்து நடைபெறுகின்றதான ‘மலாக்கா’ கால்வாயின், ‘வாய்’ என்று கூறப்படுகின்ற இடத்தில், ‘ஆர்ச்’ தனது அமைவிடத்தைக் கொண்டிருப்பது, இதன் சிறப்பம்சம் ஆகும்.
‘ஆர்ச்’ஆனது, இந்தோனேசிய நாட்டின் ஒரு பகுதி என்றாலும், தமது சொந்த நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரதேசம் தொடர்பாக, மேற்குலகம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.
‘ஆர்ச்’ பிரச்சினையில் இருந்து, இலங்கையின் வடக்குகிழக்கு பிரச்சினை அதிக வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்து மகா சமுத்திரத்தின் இரண்டு முக்கிய கடற்பாதைகள், இலங்கையின் வடக்கு கிழக்கை அண்டியதாகவே அமைந்துள்ளன. இந்து சமுத்திரத்தின் முக்கியமான ஒரு சந்தி, மன்னார் குடாவை அண்டியும், வங்காள விரிகுடா கடற் போக்குவரத்துப் பாதை இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பை அண்டியுமே அமைந்துள்ளன.
‘ஆர்ச்’ போன்று அல்லாமல், வடக்கு கிழக்குப் பிரதேசம் எண்ணெய்வளம் அற்ற ஒரு பிரதேசமாக இருக்கலாம். ஆனால், வடக்கு கிழக்கின் சில கரையோரப் பிரதேசங்கள் இல்மனைட் மற்றும் ‘ரூட்டில்’ தாதுப் பொருட்களை பெருமளவு தமதாகக் கொண்டிருக்கின்ற பிரதேசங்களாகும்.
புல்மோட்டை, முல்லைத்தீவு பிரதேசங்களின் நிலங்களில் பெருமளவு டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ஒக்சைட் உலோகத் தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, இந்தோனேசிய அரசாங்கம் ‘ஆர்ச்’ விடுதலை அமைப்புடன் 2002 மே மாதம் 9 ஆம் திகதி சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. ஜெனிவாவில் உள்ள சுவிஸ் நிறுவனமான Henry Dunant Centre (HDC)என்ற அமைப்பின் மத்தியஸ்தத்துடன் ஆரம்பமான சமாதானப் பேச்சுவார்த்தைகள், கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நிலையை அடைந்தது.
ஒப்பந்தத்தின் முக்கிய விடயமாக, இரண்டு தரப்பினருக்கும் இடையில் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. 150 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இந்த யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது.
யுத்த நிறுத்த அமுலாக்கலுக்கு, போராளிகளிடம் இருந்து ஆயுதக்களைவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. அதேவேளை, ஆயுதங்களை தாம் கையளித்துவிட்டால், இந்தோனேசியப் படையினர் தம்மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடக்கூடும் என்று ‘ஆர்ச்’ போராளிகள் அச்சம் அடைந்திருந்தார்கள். இதனால் யுத்த நிறுத்தம் எதிர்பார்த்த வெற்றியை அளித்திருக்கவில்லை.
டோக்கியோ பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தடங்கல்களைத் தொடர்ந்து, இந்தோனேசிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. இரண்டு வாரங்களின் முன்னர் சுவிஸ்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ‘ஆர்ச்’ விடுதலை அமைப்பு சார்பாகக் கலந்து கொண்ட ஐவரை, இந்தோனேசியப் பொலிஸார் கைது செய்ததைத் தொடர்ந்தே, இந்தத் தேக்கநிலை ஏற்பட்டது.
இதுபற்றி, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பேச்சாளரான ஸ்டீவ் டாலி என்பவர் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, “மறுநாள் டோக்கியோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள இருந்த மக்களை, எதற்காக கைது செய்யவேண்டும் என்று, அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்படவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தைகள் குழம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கருத்துத் தெரிவிக்கையில், ‘போராளிகளுடன் பேசியதன் மூலம், சமாதானத்தின் அதிக து}ரத்தைக் கடக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி மேகவதி சுவர்ண புத்திரியின் ஆர்வத்தைத் தான் பாராட்டுவதாகத் தெரிவித்திருந்தார்.
1976 ஆம் ஆண்டு ‘ஆர்ச் மேர்தகா’ (சுதந்திர ஆர்ச்) என்ற ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டது. (இதே ஆண்டுதான் விடுதலைப் புலிகள் அமைப்பும் ஸ்தாபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)
சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த தெங்கு ஹாசன் டீ டிரோ என்பவர், இந்த அமைப்புக்கு தலைமை ஏற்று நடத்தி வருகின்றார்.
70 களின் பிற்பகுதியில், ‘ஆர்ச் மேர்தகா’ அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இந்தோனேசிய ஆயுதப்படைகள் கடும் நடவடிக்கைகள் எடுத்ததுடன் 1989 ஆம் ஆண்டு வரை அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வந்தன. இந்த அமைப்பு 1989 ஆம் ஆண்டு Arch Sumatra National Liberation Front (ASNLF) என்ற பெயருடன் கிளர்ந்தெழுந்ததுடன், விடுதலை வேண்டி பொலிஸ் நிலையங்கள், இராணுவ நிலைகளின் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது. 1991 ஆம் ஆண்டு இந்தோனேசியா ‘ஆர்ச்’ பிரதேசத்தை தாக்குதல் நடவடிக்கைப் பிரதேசமாகப் பிரகடனம் செய்து, அந்த அமைப்பிற்கு எதிராகப் பாரிய இராணுவ நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட கணிப்பீட்டின்படி, 1989 முதல் 1992 வரை, 2000 மக்கள் இராணுவ நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுயாதீன அறிக்கைகளின்படி இந்தக் காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதுடன், ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்தோனேசிய இராணுவத்தின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புpரிவினைவாதப் போராட்டத்தைத் தணிக்கும் வகையில், 2002 ஜனவரியில், ‘ஆர்ச்’ மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கம் முன்வந்தது. தேசிய வளங்களுக்கான வருமானத்தை பங்கீட்டுக் கொள்ளும் வகையிலும் இந்தச் சுயாட்சி அதிகாரங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும், ஆர்ச் மக்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் நடைமுறையில் அமைந்திருக்கவில்லை. ஆர்ச் பிரதேசத்திற்கு குறிப்பிடப்பட்ட பணம் வழங்கப்படவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. வறுமை அம்மக்களைத் தொடர்ந்து வாட்டி வந்தது.
எந்தவித ஒழுங்கான முறைகளிலோ, திட்டங்களின் அடிப்படையிலோ அல்லாமல், கண்டபடி அரசாங்கம் பணத்தை இறைத்து வந்ததாகப் பிராந்திய சுயாட்சி அமைப்பின் முன்நாள் அமைச்சரான ரியாஸ் ரிட் தெரிவித்திருந்தார்.
தங்கள் பிரதேசத்தை கொள்ளையிடும் ஒரு அரசாகவே ஜகார்த்தாவை ஆர்ச் பிரதேசத்து மக்கள் நோக்கினார்கள்.
ஆர்ச் விடுதலை அமைப்புக்கள் பேச்சுவார்த்தைகளின் மூலமே பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே ஜப்பானினதும், அமெரிக்காவினதும் விருப்பமாக இருந்தது. மலாக்கா கால்வாய் வழியான கடற் போக்குவரத்திற்கு, ஆர்ச் போராளிகள் அச்சுறுத்தலாக இருந்துவிடுவார்கள் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
அதேவேளை, இந்தோனேசிய அரசாங்கம், ஆர்ச் விடுதலை அமைப்பை அழித்துவிடும் நோக்கத்தில்தான், பேச்சுவார்த்தை இடை வெளியைப் பயன்படுத்த முனைகின்றது என்பதை, இந்த இரண்டு சக்திகளும் புரிந்துகொள்ளவில்லை.
தங்களது எண்ணப்படி ஆர்ச் விடுதலை அமைப்பு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் செயற்படாத காரணத்தினால், அந்த அமைப்பை செயலிழக்க வைக்கும் படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி இந்தோனேசிய அரசாங்கத்தை அமெரிக்க மற்றும் ஜப்பான் நாடுகள் இரகசியமாக ஊக்குவித்திருந்தன.
ஆனால், பேச்சுவார்த்தைகளில் எவ்வாறான விடயங்கள் பேசப்படவேண்டும் என்பதில், ஆர்ச் விடுதலை அமைப்பு உறுதியாகவே இருந்தது. ஆயுதங்களைக் களைவது சுயநிர்ணய உரிமை, வளங்களைப் பங்கிடுவதற்கு தேவையான கட்டமைப்பு போன்ற விடயங்களில் ஆர்ச் அமைப்பு மிகவும் உறுதியான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது.
ஆனால் இந்தோனேசிய அரசோ, தனது இராணுவ நடவடிக்கைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜகார்த்தாவின் சுயாட்சித் திட்டத்தை ஆர்ச் அமைப்பு ஏற்றுக்கொள்வதுடன், உடனடியாகவே ஆயுதக் கையளிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. அமெரிக்காவும் ஜப்பானும் இந்தோனேசியாவின் இந்த இராணுவ நகர்விற்குத் தமது ஆதரவை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆர்ச் சமாதான முன்னெடுப்புக்களை நாம் கவனமாக ஆராய்ந்து, எமது நாட்டின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டோமேயானால், அங்கு உபயோகிக்கப்பட்ட முறைகள் மிகவும் பொருந்துவதை காண முடியும்.
இராஜதந்திர ஏமாற்றுப் பேச்சுவார்த்தைகளின் அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தடி ஒன்றினால் நாம் தாக்கப்பட்டுவிடக்கூடிய ஆபத்துக்கள் பற்றி நாம் நிச்சயம் கவனம் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.


14.06.2003 சிவராம்

0 comments: