
இதுவரை தீர்ப்பு வழங்கப்படாத சிவராம் கொலை வழக்குக்கு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மனங்களை விட்டு விலகி விடாத ஒருவரான தராக்கி என்ற சிவராமின் நினைவுகளை மட்டும் அனேகமானோர் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் கற்று உண்மைகள் பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமானது.
சிவராமின் நான்காவது நினைவு தினத்தில் அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் ஒரு சேரப் பதித்து வெளியிடுவதற்கான முயற்சியை யாராவது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
ஈழப்போராட்டத்தில் தனது வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வருடைய வாழ்க்கையின் பல ஞாபகங்கள் மறைந்தே போயின. இருப்பவற்றை மறைத்து விடாமல் வெளிப்படுத்தி வாருங்கள்.
பத்திரிகையாளர்கள் நல்ல பல புதிய விடயங்களைத் தொடருந்து கற்க வேண்டும் என்ற அவரின் ஆலோசனைக்கு அமைய சிந்தியுங்கள் செயற்படுங்கள் நோக்கங்களை நிறைவேற்றுங்கள். அது அவருடைய ஆத்மா சாந்தியடைய வழி செய்யும்.
Tuesday, April 28, 2009
சிவராமின் நான்காவது ஆண்டு நினைவு அஞ்சலி
Thursday, April 23, 2009
தமிழரை அடக்க தமது இறமையை அடகுவைக்கும் சிங்களத் தலைமைகள்
1977 பொதுத் தேர்தலில் தமிழீழத் தனியரசை நிறுவ மக்களிடம் ஆணை கேட்டுப் பெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி. 1979 இல் மாவட்ட சபைகள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அது சிறீலங்கா அரசுடன் ஆரம்பித்தது. இது தொடர்பான சட்ட விடயங்களை கலாநிதி நீலன் திருச்செல்வமும், தந்தை செல்வாவின் மருமகனான பேராசிரியர் ஜெரட்ணம் வில்சனும் கையாண்டனர்.
தமிழரை ஏமாற்ற ஸ்ரீ லங்கா அரசு பேச்சுவார்த்தைகளை மீண்டும் பயன்படுத்துகிறது. அவற்றை நீடிப்பதன் மூலம் தமிழ் இளைஞர்களை கொடூரமாக அடக்குவதற்கு வழிகோலுகிறது எனவும் கருதிய பேராசிரியர் வில்சன் தனிநாட்டுக்கான போராட்டத்தில் முழுமையாகக் குதிக்கும்படி கூட்டணியை வேண்டினர். (திரு. அமிர்தலிங்கமும் கலாநிதி நீலனும் அவருடைய அறிவுரையைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பது வேறு விடயம்).
இதுமட்டுமன்றி அவர் சில முக்கிய வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தமிழரின் நிலைமையை எடுத்துரைத்தார். இதன்போது கொழும்பிலுள்ள சீனத்தூதுவரை சந்தித்து தனித் தமிழ் ஈழம் உருவாக்கப்பட்டால் அதனை அவரது நாடு எங்கனம் நோக்கும் என பேராசிரியர் வில்சன் வினவினார்.
தமிழீழம் உருவானால் அது சோவியத் யூனியனின் செல்வாக்கிற்குட்படவே வாய்ப்பு உண்டு எனவும் அதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகளுடனும், தனக்குச் சார்பான ஆபிரிக்க நாடுகளுடனும் தொடர்புகளைப் பேணுவது சீனாவிற்கு கடினமாகிவிடும் எனவும் சீனத் தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக பேராசிரிர் வில்சன் கூறுகிறார். இக்கூற்றின் தேந்திர (Strategic) ) பெறுமானங்களை பகுத்தறிய வேண்டிய தேவை அப்போது பேராசிரியர் வில்சனுக்கோ, அவர் சார்ந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கோ இருக்கவில்லை. ஆனால் இன்று எமது போராட்டமும் முழுக்க முழுக்க ஒரு சர்வதேச பரிமாணத்தினுள்ளேயே தனது எதிர்காலத்தை கணக்கெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தனது படைகளைக் கொண்டு புலிகளை அழித்து தமிழரைத் தனது சிங்கள பௌத்த மேலாண்மையாட்சியினுள் மீண்டும் அமுக்கி, சோரம் போக இம்மியளவும் தயங்காத, சூழலில் ஊறிப்போன மலையகத் தமிழ் அமைச்சர்கள் போன்ற தலைமைகளை எம்மிடையே உருவாக்கி எம்மை அடிமைப்படுத்தி ஆளலாம் என்ற நம்பிக்கையை ஸ்ரீ லங்கா அரசு கணிசமாக இன்று இழந்துவிட்டது.
இதேவேளை ஸ்ரீ லங்காவின் ஒற்றையாட்சி முறையை எந்த வøகயிலும் மாற்றிட முடியாது, கூடாது என்பதையும் சிங்கள மேலாண்மையாட்சியாளர் அறிவர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழரை கடந்த அரை நூற்றாண்டு செய்தது போல் ஒரேடியாகப் போய்க் காட்டிட முடியாதென்பதையும் அவர்கள் உணர்கின்றனர். இவையனைத்தையும் வகுத்துக் தொகுத்துப் பார்க்கையில் தமிழரைக் கையாள்வதற்கு வெளிநாடுகளின் உதவியை நாடிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வரலாற்று நோக்கில் பார்க்கையில் இதைச் செய்வதற்காக சிங்கள மேலாண்மையாளர் ஸ்ரீ லங்காவின் இறைமையை முற்றாக விட்டுக் கொடுப்பதற்குக் கூடத் தயங்கிட மாட்டார்கள் என்பது தெளிவாகப் புரியும்.
உலகின் வல்லரசுகளுக்கும், வல்லரசு நிலையை அடைய முனையும் நாடுகளுக்கும் இந்து மாகடல் எவ்வளவு முக்கியமானதென்பதும், அதனூடு செல்லும் பொருளாதார மற்றும் போரியல் முதன்மை வாய்ந்த கடற்பாதைகளின் சரி நடுவண் அமைந்துள்ள இலங்கை அவற்றின் தவிர்க்க முடியாத கணிப்புக்குரியதென்பதும் சிங்கள மேலாண்மையாளருக்கு நீண்டகாலமாகவே தெரியும். இøத அவர்கள் தேவை ஏற்படும் போதெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே வந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரம் பெரும் விடுதலைக் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்த தனது காலணிகளை தொடர்ந்து வைத்திருப்பது பொருளாதார வகையில் பயனற்றது என பிரித்தானிய ஏகாதிபத்தியம் உணரத் தொடங்கியிருந்த காலமது. அதேவேளை இக்காலனியாதிக்கத்துக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் தனது பொருளாதார மற்றும் போரியல் நலன்களை பாதிக்கக்கூடிய வகையில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதிலும் அது அக்கறையாயிருந்தது. அதாவது தனது பெரும்பாக நலன்களை தொடர்ந்து பேண உடன்படிக்கைய தலைமைகளிடம்தான் கைவிட வேண்டிய காலனி நாடுகளின் ஆட்சியை கொடுக்க அது எண்ணிற்று. இதன் காரணமாகவே இந்தியாவில் ஜெர்மனிக்குச் சார்பாகவும் சோவியத் யூனியனுக்குச் சார்பாகவும் செயற்படுகிறார்கள் எனக் கருதப்பட்ட தேசிய விடுதலைக் கோட்பாட்டாளர்களையும், கிளர்ச்சிக்காரர்களையும் ஓரங்கட்டுமுகமாக காந்தியையும் நேருவையும் முதன்மைப்படுத்தி அவர்களிடமே பிரித்தானிய ஆட்சியையும் கையளித்தது. (கமல்ஹாசனின் "ஹேராம்' படத்திலும், பிரித்தாளும் அரசியல் பற்றி நான் கடந்த ஆண்டு "நிகரி'யில் எழுதிய கட்டுரையிலும் இதுபற்றி சில மேலதிக தகவல்களைக் காண்க).
ஆசியாவில் பிரித்தானியாவின் கடல் மேலாதிக்கத்திற்கு அன்று இலங்கை அடித்தளமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவினூடாக ஜப்பான் தென்னாசியாவை நோக்கி மேற்கொண்ட பெரும் படையெடுப்பை எதிர்கொள்ளவென நிறுவப்பட்ட பிரித்தானிய அமெரிக்க கூட்டுக் கடற்படைத் தலைமையகம் திருமலையிலேயே அமைந்திருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். தென்கிழக்காசியாவின் வளங்கள், கடற்பிராந்தியங்கள் பாதைகள் என்பவற்றின் மீதும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகியவற்றின் மீதும் தனது பிடியை வைத்திருப்பதற்கு இலங்கையில் தனது படைத்தளங்களும் பெரும் எரிபொருட்களஞ்சியங்களும் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பதில் பிரித்தானியா கவனமாக இருந்தது. இதன் காரணமாக இலங்கையைத் தனது காலனியாதிக்கத் தலையினின்றும் விடுவிப்பதாயின் அதற்கு முழு இறைமையைக் கொடுப்பதில்லை என்பதிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உறுதியாயிருந்தது.
இதன் காரணமாக இலங்கைக்கு பகுதித் தன்னாட்சி வழங்கும் வகையில் செய்யப்படவிருந்த அரசியல் யாப்பு வரைபு முயற்சிகளுக்கு இன்றியமையாத அடித்தள நிபந்தனைகளாக பாதுகாப்பு வெளி அலுவல்கள் என்பவற்றை வரையறுத்து 1943ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் (Secretary of State) ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். 1943இரண்டாம் உலகப் போர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பிரித்தானிய அமெரிக்க ஆதிக்கத்தை முறியடித்து கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஜப்பானிய படைகள் தென்னாசியாவை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தன. எனவே இலங்கையில் தனது ஆதிக்கத்திற்குச் சவாலாக அமைந்திடக்கூடிய எவருடைய கையிலும் அரசியல் அதிகாரம் குறுங்காலத்திலோ நீண்டகாலத்திலோ போய்விடக் கூடாது என்பதில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது கவனமாக இருந்ததில் வியப்பில்லை.
இலங்கையில் பிரித்தானிய காலனியாதிக்கத்தை முற்றாக ஒழித்திட வேண்டும் என அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே குரலெழுப்பப்பட்டது. தென்னிலங்கையில் தீவிர இடதுசாரிகள் மாத்திரமே இக்கருத்தைக் கொண்டிருந்தனர். 1927 இலிருந்து குடாநாடெங்கும் கிளைவிட்டுப் பரவிய யாழப்பாண இளைஞர் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை இலங்கையிலிருந்து முற்றாக விரட்டியடித்து இலங்கையில் முழு இறைமையுள்ள தன்னாட்சி நிறுவப்பட வேண்டுமென தீவிரமாகச் செயலில் இறங்கிற்று. 1930 ஆம் ஆண்டு இலங்கையில் அன்று எவரும் செய்யப் பயந்து நடுங்கிய ஒரு செயலை அது செய்தது. அவ்வாண்டு ஜூன் மாதம் பிரித்தானிய மன்னரின் பிறந்த நாள். இலங்கையிலுள்ள குடி மக்கள் அனைவரும் அதைக் கொண்டாடி தமது அரச விசுவாசத்தை வெளிப்படுத்திடும் நாளாகும்.
அன்று யாழப்பாண இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் பிரித்தானியக் கொடியைப் பொதுவிடத்தில் போட்டெரித்தனர். இதன் பின்னர் 1931 ஆம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸின் மாநாட்டில் இலங்கைக்கு முழுமையான தன்னாட்சி கிடைப்பதற்கு தம் உயிர்களைத் தியாகம் செய்தாயினும் நாட்டிலுள்ள அனைவரும் போராட வேண்டுமென அறை கூவல் விடுக்கப்பட்டது. அவ்வாண்டு பிரித்தானியர் அறிமுகப்படுத்திய டொனமூர் அரசியல் யாப்பு ஏகாதிபத்தியத்தின் பிடியை இலங்கையில் நீடிப்பதற்கான ஒரு சதியெனவும் அதனடிப்படையில் அமைக்கப்பட்ட அரசவையை (State council) அனைவரும் புறக்கணிக்க வேண்டுமெனவும் யாழ். இளைஞர் காங்கிரஸ் கூறியது. இதற்கென குடாநாட்டில் அது செய்த பெரும் பரப்புரை முயற்சி வெற்றி பெற்றது. பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு இலங்கையில் விடுக்கப்பட்ட பெரும் சவால் அம்முக்கியமான காலகட்டத்தில் இதுவேயாகும். தென்னிலங்கையில் இளைஞர் காங்கிரஸின் விடுதலை அறைகூவலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இது இப்படியிருக்க பிரித்தானியாவின் நலன்களை நன்கு புரிந்து கொண்ட சிங்கள மேலான்மை நன்கு புரிந்து கொண்ட சிங்கள மேலாண்மையாளரின் தலைவர் டி.எஸ். சேனாநாயக்கா இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாயில் இங்கிலாந்து சென்றார். தன்னிடமும் தனது சிங்கள மேலாண்மைச் சகபாடிகளிடமும் இலங்கையின் ஆட்சி கையளிக்கப்படுமாயின்தான் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உடன்பட முடியுமெனவும் அதற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை சமாளித்து ஆட்சியைக் கொண்டு நடத்த முடியுமெனவும் உறுதியளித்தார். 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராகச் சிங்களவரைத் தூண்டிவிட்ட ஒரு சிக்கலுக்குரிய பேர் வழியாக பல காலம் டி.எஸ். சேனநாயக்காவை கருதிவந்த பிரித்தானியா ஏகாதிபத்தியம் இப்போது அவரை அரவணைக்கலாயிற்று.
தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை மேலும் வெளிப்படுத்திடுவதற்காக 1943 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸினுள் இடதுசாரிகள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து டி.எஸ். சேனாநாயக்க அதிலிருந்து வெளியேறினார். இது அவர் மேற்கொண்ட நன்கு கணக்கிடப்பட்ட ஒரு செயலாகும். என சிங்கள வரலாற்றுப் பேராசிரியர் கே.எம்.டி. சில்வா கூறுகிறார். இலங்கையின் இடதுசாரிகளும் அந்நேரத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து முழுமையான தன்னாட்சி வேண்டும் எனக் கோரி வந்தனர். ஆனால், அவர்கள் யாழ். இளைஞர் காங்கிரஸ் போல் இதில் தீவிரமாக இருக்கவில்லை. சிங்கள இடதுசாரித் தலைவர்களான அறை கூவலைப் புறக்கணித்து அரசவைத்தேர்தலில் நின்றனர்.
இடதுசாரிகளின் எதிரியாக தன்னை இவ்வாறு காட்டிக் கொண்டதன் மூலமும் சிங்கள தேசத்தின் தந்தை தன்னை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தவிர்க்க முடியாத விசுவாசியாக உருவாக்கிக் கொண்டார்.
பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது தொடர்பாக டி.எஸ்.சேனாநாயக்கவும் அவரது நண்பர்களும் இங்கிலாந்து சென்று அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரித்தானியாவின் ஆசிய மேலாதிக்கத்தை பேணுவதற்கு வேண்டிய தளங்களையும் துறைமுகங்களையும் அத்துடன் இலங்கையினுடைய வெளிநாட்டு அலுவல்களையும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு தானும் தன்னைச் சார்ந்த சிங்கள மேலாண்மை தலைவர்களும் தயாராயிருப்பதாக இங்கிலாந்தின் ஏகாதிபத்திய உயர் அதிகாரிகளை நம்பவைத்தார்.
இந்த அடிப்படையிலேயே இலங்கைக்கு தன்னாட்சி வழங்கப்பட்டபோது பிரித்தானியாவுடன் மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தன்னுடைய தேவைக்கு ஏற்ற படைகளையும் போர்தளபாடங்களையும் இலங்கையில் பிரித்தானியா வைத்திருக்கலாம் எனவும் அதற்கு உகந்த வகையில் இந்நாட்டின் கடல் மற்றும் வான் படைதளங்களையும் தொலைத் தொடர்பு வசதிகளையும் பயன்படுத்தலாம் எனவும் இவ்வொப்பந்தத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி திருகோணமலை பிரித்தானிய கடற்படை தேவைகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் பிரித்தானிய வான் படையின் பாவனைக்கும் விடப்பட்டது.
இலங்கையின் இறைமையை பிரித்தானியாவுக்கு இங்ஙனம் தாரை வார்த்ததற்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு டி.எஸ். சேனõநாயக்க அவர்களும் அவருடைய சகபாடிகளும் பின்வருமாறு விளக்கமளித்தனர். இலங்கை ஒரு சிறிய நாடு, அதன் மத இந்திய மற்றும் சோவியத் யூனியன் படையெடுத்திடக்கூடிய வாய்ப்பு உண்டு. அதை தடுக்க பிரித்தானியா வுடன் மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தம் கட்டாயமாக தேவை என அவர்கள் சாட்டுகின்றனர்.
மேற்படி ஒப்பந்தம் இலங்கையினுடைய இறைமையை இல்லாமல் செய்கிறது என்ற காரணத்தைக் காட்டி சோவியத் யூனியன் 1955 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கிடைப்பதை தடை செய்து வந்தது. 1956 இல் ஆட்சிக்கு வந்த திரு. பண்டாரநாயக்க அவர்கள் தன்னுடைய ஏகாதிபத்திய எதிர்பார்ப்புக்கு கோட்பாட்டை நிலை நாட்டு முகமாக இவ்வொப்பந்தம் செல்லுபடியாகாது என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இக்காலகட்டத்தில் பிரித்தானியாவின் கையில் இருந்து சுயஸ்கால்வாய் பறிபோயிருந்தது. இதன் காரணமாக பிரித்தானியாவில் இருந்து மத்திய தரைகடல், செங்கடல், அரபிக் கடல் என்பவற்றின் ஊடாக செல்கின்ற கடற்படை பாதை மீதான பிரித்தானியாவின் பிடி அற்றுப்போனது. இதனால் அந்நாடு இலங்கையில் தளங்களையும் படைகளையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லாது போயிற்று. எனவே பண்டாரநாயக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை உதாசீனம் செய்ததை பிரித்தானியா பெரிதுபடுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனினும் 1983 ஆம் ஆண்டிலே தமிழர்களுடைய போராட்டம் முனைப்பு பெறும் என்ற நிலையிலும் இதையொட்டி இந்தியாவின் தலையீடு ஏற்படலாம் என்ற அச்சத்தில்அன்றைய ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் பிரித்தானியாவினுடனான மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்ந்து செல்லுபடியாகும் எனவும் பிரித்தானியா அவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு போர் உதவி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இவ்வளவு வரலாறும் ஏன் தேவையென்ற கட்டத்தில் நீங்கள் வினவலாம்.
ஒன்று பிரித்தானிய இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடித்தளமான விடயங்களை இதுவரை இங்கு போட்டு வரும் பிராந்திய மற்றும் வல்லரசுத் தலையீடுகளுக்கு காரணமாகவுள்ளது என்பது.
இரண்டு மேற்படி விடயங்களே சோழர் கடல் கடந்த படையெடுப்புகளுக்கும் அவர்கள் இலங்கை தீவின் மீதும் கொண்டிருந்த மேலாதிக்கத்திற்கும் சீனா அன்றும் இன்றும் இந்நாட்டின் கீழ் கொண்டிருக்கும் அக்கறைக்கும் தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் ஜப்பானும் இங்கு காட்டும் கரிசøனக்கும் அடிப்படை என்பது.
மூன்றாவதும், முக்கியமானதுமாக நாம் இவற்றில் கவனிக்க வேண்டியது எமது விட்டுக்கொடுக்கப்படாத இறைமையாகும். இலங்கையில் அவ் உருவாக்கம் நடைபெற்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் (1947, 1972, 1978) நாம் எமது இறைமையை விட்டுக் கொடுக்கவில்லை. இதனுடைய அர்த்தம் என்னவெனில் சிங்கள தேசம் தமது இறைமையை விட்டுக்கொடுத்து செய்துக்கொண்ட செய்ய முனைகின்ற எந்தவொரு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கும் நாம் கட்டுப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதாகும். இதன் காரணமாகவே எமது இறைமையை பேணும் உறுதியை குழைப்பதை பல புல்லுருவிகளும் கயவர்களும் எம்மிடையே ஏவப்படுகின்றார்கள். இவர்களை நாம் இனங்கண்டு எமது இறைமையை இம்மியளவும் விட்டுக் கொடாதர்வர்களாக தன்மானத்துடன் வாழ வேண்டும். (சீனத் தூதுவர் பேராசிரியர் வில்சனிடம் தமிழீழம் பற்றிக் கூறிய கருத்தின் விரிவையும் அதன் இன்றைய பரிமாணங்களையும் அடுத்த கிழமை பார்ப்போம்).
29.06.2003 டி. சிவராம்

